“இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்”: உலக கோப்பை ஃபைனல் மேட்ச் பார்த்த ஜேபி நட்டா நம்பிக்கை!
ஹைதராபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியை தெலுங்கானாவில் பெரிய திரையில் பார்த்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, “இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்” எனக் கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தலா 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி 54 ரன்னும், கே.எல்.ராகுல் 66 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் 240 ரன் எடுத்தது.

இந்நிலையில், 241 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. 26 ஓவர்கள் முடிவில் ஆஸி அணி 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 69 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி முன்னேறி வருவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது.
இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் நடைபெற்ற 10 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்தது. ஃபைனலிலும் வென்று 3வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாடு முழுவதும் பொது இடங்களிலும் பெரிய திரைகளில் ஏராளமான ரசிகர்கள் உலக கோப்பை ஃபைனல் மேட்ச்சை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஹைதரபாத்தில் உள்ள மல்காஜ்கிரியில், உலக கோப்பை இறுதிப் போட்டியை பெரிய திரையில் கண்டு ரசித்தார். ஜேபி நட்டா மற்றும் பாஜக தொண்டர்கள் உலகக் கோப்பை ஃபைனல் மேட்ச் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பெரிய திரையில் ரசித்துப் பார்த்த ஜேபி நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள். இந்திய கிரிக்கெட் அணியுடன் அனைத்து இந்தியர்களும் ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள், இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications