ஆந்திராவில் அண்ணன்.. தெலுங்கானாவில் தங்கை.. 'ராஜண்ணா ராஜ்யம்'.. புதிய கட்சி தொடங்கிய YSR ஷர்மிளா..!
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா. இவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஆவார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திர முதலமைச்சராகவும் இருந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி, கடந்த 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் அவமரியாதை செய்ததால் அக்கட்சியிலிருந்து விலகிய ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

அதன்பிறகு அவர் நடத்திய பாதயாத்திரைகளும், மக்கள் சந்திப்பு கூட்டங்களும் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. முதலமைச்சராக பதவியேற்றது முதலே மக்களை கவரும் வகையில் புதுமையான அறிவிப்புகளை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
இந்நிலையில் அவருடன் பிறந்த சகோதரியான ஷர்மிளா (47), தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான நேற்று புதிய கட்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொள்ளாத சூழலில், அவரது தாயார் விஜயம்மா மட்டும் கலந்துகொண்டார்.
சுயமுன்னேற்றம், மக்கள் நல வாழ்வு, சமத்துவம் என்ற மூன்று கொள்கை முழக்கங்களுடன் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை தொடங்கியிருக்கிறார் ஷர்மிளா. இதுமட்டுமல்லாமல் தெலுங்கானாவில் 'ராஜண்ணா ராஜ்யம்' கொண்டுவரப்போவதாக சூளுரைத்திருக்கிறார். அதாவது தனது தந்தை ராஜசேகரரெட்டியின் ஆட்சியை தெலுங்கானா மக்களுக்கு தரப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
கடல்நீல வண்ண கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஷர்மிளா, தற்போது தெலுங்கானாவை ஆளும் சந்திரசேகரராவ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சகோதரி புதிய கட்சி தொடங்கிய விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் நிலைப்பாடு குறித்த விவரம் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications