திருப்பதியில் 5 வயது சிறுவனை கவ்வி பக்தர்களை அலறவிட்ட சிறுத்தை புலி.. கூண்டு வைத்து பிடித்த வனத்துறை
ஐதராபாத்: திருப்பதியில் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக செல்லும் போது சிறுத்தைப்புலி தாக்கி 3 வயது சிறுவன் காயமடைந்தான். தொடர்ந்து பக்தர்களை தாக்கி அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதனால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடுமுழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாகவும் ஏழுமலையானை தரிசிக்க செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு திருமலை கோவிலுக்கு குடும்பத்தினருடன் 3-வயது சிறுவன் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தான். அலிபிரி மலைப்பாதையின் 7 வது மைல் பகுதியில் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 3-வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான். அப்போது வனப்பகுதிக்குள் விலங்கு ஒன்றை விரட்டி வந்த சிறுத்தை திடீரென சிறுவனை நோக்கி ஓடி வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை சிறுத்தை புலி தாக்கியது. சிறுத்தை தாக்கியதும் அலறி துடித்த சிறுவன் கத்தினான். இருப்பினும் சிறுவனை சிறுத்தை விடவில்லை. ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை சிறுத்தை தனது வாயில் கவ்வியபடி அருகே உள்ள புதருக்குள் கொண்டு சென்றது. இதை அந்த வழியாக சென்ற பக்தர்கள், போலீசார் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இணைந்து சிறுவனை மீட்கும் வகையில் கூச்சலிட்டனர்.
மேலும் 2 போலீசார் சிறுத்தையிடம் தொடர்ந்து சத்தம் எழுப்பியபடி சென்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பக்தர்கள் சேர்ந்து கற்கள், கம்புகளை வீசி சிறுத்தையை விரட்டினர். இதையடுத்து சிறுத்தை புலி அங்கிருந்து தப்பி ஓடியது. சிறுத்தை புலி தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுத்தை நடமாட்டத்தால் பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
சிறுத்தை புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தபடி கூண்டும் வைத்து இருந்தனர். இந்த நிலையில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை புலி சிக்கியது. இதனால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications