தெலுங்கானா: வெல்லப் போகும் 'நிஜாம்' யார்? காங்கிரஸ் Vs பிஆர்எஸ் Vs பாஜக- பலமான மும்முனைப் போட்டி!
ஹைதராபாத்: 18-வது லோக்சபா தேர்தலின் 4-வது கட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தின் 17 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ், மத்தியில் ஆளும் பாஜக என 3 கட்சிகளுமே வலுவாக மோதுவதால் மும்முனைப்பட்டி பலமாக இருக்கிறது.
லோக்சபா தேர்தல் இதுவரை 3 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளன. மே 13-ல் 4-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் தெலுங்கானாவின் 17 தொகுதிகளும் அடங்கும்.

தெலுங்கானாவின் 17 லோக்சபா தொகுதிகள்: அடிலாபாத், பெத்தப்பள்ளி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், மல்காஜ்கிரி, செகந்திராபாத், ஹைதராபாத்,
செவெல்லா, மஹ்பூப்நகர், நல்கொண்டா, நாகர் கர்னூல், புவனகிரி, வாரங்கல், மஹ்பூபாபாத், கம்மம், ஜாஹிராபாத்
2019-ம் ஆண்டு தேர்தலில் தெலுங்கானா முடிவுகள்: அப்போதைய டிஆர்எஸ் (தற்போதைய பிஆர்எஸ் கட்சி) 9 இடங்களையும் பாஜக 4 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைத்தன. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு வழக்கம் போல ஹைதராபாத் தொகுதி கிடைத்தது.
களம் எப்படி இருக்கிறது?: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ். இதனால் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இழந்த செல்வாக்கை மீட்க பிஆர்எஸ் கட்சி போராடுகிறது. தென்னிந்தியாவில் வலுவாக காலூன்ற முடியும் என பாஜக நம்புகிற மாநிலங்களில் ஒன்று. இதனால் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக என மூன்று கட்சிகளிடையே கடுமையான மும்முனைப் போட்டி தெலுங்கானாவில் நிலவுகிறது.
தெலுங்கானா தேர்தல் பிரச்சனைகள்: 10 ஆண்டுகால மாஜி முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசின் ஊழல்களைப் பேசுகிறது காங்கிரஸ். பதிலடியாக போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கையில் எடுக்கிறது பிஆர்எஸ். ஊழலுக்கு எதிராக கட்சிதான் பாஜக என்பதை சந்திரசேகர ராவ் மகள் கவிதா மூலம் நிரூபித்துவிட்டதாக பேசுகிறது பாஜக. குடிநீர் பிரச்சனையையும் இம்முறை காங்கிரஸ் அரசுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகிறது பிஆர்எஸ். குறிப்பாக ஹைதராபாத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை விஸ்வரூபமாக்கிக் கொண்டிருக்கிறது பிஆர்எஸ். பாஜகவோ மோடி அலை கை கொடுக்கும் என மலைபோல நம்புகிறது.
தெலுங்கானாவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தொகுதிகள்:
ஹைதராபாத் தொகுதி: முஸ்லிம் வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதி. மஜ்லிஸ் கட்சியின் கோட்டை இது. 1984-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை சுல்தான் சலாவுதீன் ஓவைசி இத்தொகுதி எம்.பி.யாக தொடர்ந்து வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு முதல்வர் சுல்தான் சலாவுதீன் ஓவைசியின் மகன் ஓவைசி எம்பியாக இருந்து வருகிறார். தற்போது இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக நடனக் கலைஞரும் தொழில் முனைவோருமான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் வேட்பாளராக கட்டம் சீனிவாச யாதவ், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முகமது வலியுல்லா சமீர் போட்டியிடுகின்றனர்.
செகந்திராபாத்: ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தனம் நாகேந்தர், பிஆர்எஸ் வேட்பாளராக பத்மா ராவ் கவுட் களம் காண்கின்றனர் பாஜகவின் மாநிலத் தலைவர் சிட்டிங் எம்பியும் மத்திய அமைச்சருமான ஜி.கிஷண் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் பாஜக வெல்ல முடியும் என நம்பக் கூடிய தொகுதிகளில் செக்ந்திராபாத் முக்கியமானது. 1991-ல் பாஜக மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா வென்ற தொகுதி. 1998, 1999 மற்றும் 2014-ல் மீண்டும் பண்டாரு தத்தாத்ரேயா வென்று எம்பியானார். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் கிஷண் ரெட்டி வென்று எம்பியானார்.
நிஜாமாபாத்: தெலுங்கானாவில் பாஜக வெல்வோம் என நம்புகிற இன்னொரு தொகுதி நிஜாமாபாத். இத்தொகுதியில் சிட்டிங் எம்பியாக பாஜகவின் தர்மபுரி அரவிந்த் பதவி வகிக்கிறார். இம்முறையும் தர்மபுரி அரவிந்த் மீண்டும் களம் காண்கிறார். பிஆர்எஸ் பஜிரெட்டி கோவர்தனையும் காங்கிரஸ் ஜீவன் ரெட்டியையும் வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது. 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிஜாமாபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 2 சட்டசபை தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.
கரீம்நகர்: பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சிட்டிங் எம்பி பண்டி சஞ்சய் குமார் மீண்டும் வேட்பாளராக களம் காண்கிறார். காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்று வந்த தொகுதி. 2019-ல் முதல் முறையாக கரீம் நகரில் பாஜக்வின் பண்டி சஞ்சய் குமார் வெற்றி பெற்றார். தற்போது பண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக காங்கிரஸ் வெளிச்சல ராஜேந்திர ராவையும் பிஆர்எஸ் கட்சி வினோத் குமாரையும் வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications