செம ட்விஸ்ட்.. சந்திரசேகரராவ், பாஜகவுக்கு ‛அடி’.. அப்போ காங்கிரஸ்? பரபர தெலங்கானா தேர்தல் சர்வே
ஹைதராபாத்: தெலங்கானாவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் மற்றும் பாஜக சறுக்கலை சந்திக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் ‛இந்தியா' கூட்டணி கடந்த முறையை விட அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தொடங்கி விட்டன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற பெயரில் கூட்டணியை தொடங்கி உள்ளன. இந்த கூட்டணியின் 2 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. 3வது ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற உள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியன் ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையாமல் தனித்து உள்ளனர்.
குறிப்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பாஜக, காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்க திட்டமிட்டு காய்நகர்த்தி வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி உள்பட 26 கட்சிகள் இணைந்து‛‛இந்தியா'' கூட்டணி உருவான நிலையில் அவரது இந்த முயற்சி என்பது கைக்கூடவில்லை. இதனால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தான் தெலங்கானா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' அமைப்பு சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அது சந்திரசேகரராவின் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியமாக உள்ளது.
அதாவது வரும் தேர்தலில் 17 நாடாளுமன்ற தொகுதிகள் தெலங்கானாவில் உள்ள நிலையில் அதில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சந்திரசேகரராவின் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைய வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜகவும் தெலங்கானாவில் சறுக்காலை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் 4 தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற நிலையில் இந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த முறை 3 தொகுதிகளை வென்ற நிலையில் இந்த முறை ‛இந்தியா' கூட்டணி 5 தொகுதிகள் வரை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கடந்த தேர்தலில் ஹைதராபாத்தில் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் அசாதுதீன் ஓவைசி போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அந்த தொகுதியை அவர் தக்க வைப்பார் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications