கோல் அடித்த மெஸ்ஸி - ரேவந்த் ரெட்டி.. ஹைதராபாத்தில் பறந்த ரசிகர்கள் விசில்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடந்த கால்பந்து போட்டியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்று விளையாடினர். போட்டியின் போது மெஸ்ஸி மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் கோல் அடித்தனர்.
கால்பந்து ஜாம்பவன் லியோன்ல் மெஸ்ஸி இன்று மாலை ஹைதராபாத் நகருக்கு வருகை தந்தார். அவரை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வரவேற்றார். ராஜீவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அணிக்கு எதிரான 7 வெர்சஸ் 7 கண்காட்சிப் போட்டியில் பங்கேற்று கால்பந்து விளையாடினார் மெஸ்ஸி.

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மேலும் அவரது இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் இந்தியா வருகை தந்துள்ளனர். இன்று மாலை ஹைதராபாத் வந்த லியோனல் மெஸ்ஸியை, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வரவேற்றார்.
உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு மெஸ்ஸி தலைமையிலான 'அபர்ணா-மெஸ்ஸி ஆல் ஸ்டார்ஸ்' மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான 'சிங்கரேணி ஆர்ஆர்9' அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான போட்டி நடைபெற்றது.
மைதானத்தில் கால்பந்து விளையாட்டுப் போட்டிக்கான சீருடையில் வந்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடினார். காட்சிப் போட்டியின் போது மெஸ்ஸி மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் கோல் அடித்தனர்.
ரேவந்த் ரெட்டியின் ஆர் ஆர் 9 , மெஸ்ஸியின் அபர்ணா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மெஸ்ஸி இணைந்து கால்பந்து விளையாடிய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மைதானத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மெஸ்ஸி, சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் மெஸ்ஸி, ராகுல் காந்திக்கு கையெழுத்திட்ட நம்பர் 10 ஜெர்சியை அன்பளிப்பாக வழங்கினார். கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண்பதற்காக ஹைதராபாத் மைதானம் முழுவதும் ரசிகர்கள் குவிந்ந்திருந்தனர்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற மெஸ்ஸியை நேரில் காண பெருந்திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் மெஸ்ஸி ரசிகர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றமடைந்த சில ரசிகர்கள் அங்கிருந்த பொருட்களை உடைத்து, வன்முறையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications