4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 4ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல மறுபுறம் ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே மாம் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக தேர்தல் வரும் மே மாதம் 13ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. மே 13ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தல் ஏப்.19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்.26, மூன்றாம் கட்ட தேர்தல் மே 7, நான்காம் கட்ட தேர்தல் மே 13, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20, ஆறாம் கட்ட தேர்தல் மே 25, ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியன்று நடைபெறுகிறது.
கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகள், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், பீகார், அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்டமாகவும், குஜராத், கோவா மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், பீகார், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
லடாக் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் , பீகார் ஆகிய மாநிலங்களுக்கு 5ம் கட்டமாகவும், டெல்லி, ஹரியானா மற்றும் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் உள்ளத தொகுதிகளுக்கு 6ம் கட்டமாகவும், பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீதம் இருக்கும் தொகுதிகளுக்கு இறுதி கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications