வேர்க்கடலை வியாபாரியின் உதவி.. 11 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாத என்ஆர்ஐ குடும்பம்.. நெகிழ்ச்சி!
ஹைதராபாத்: பல கோடி ரூபாய்க் கடன் வாங்கிக் கொண்டு கடனை திரும்பச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நபர்களுக்கு மத்தியில், ஆந்திர மாநிலத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு யூ கொத்தப்பள்ளி கடற்கரையில் 10 வயது சிறுவன் நேமானி பிரணவ், தனது சகோதரி சுசிதா மற்றும் பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு கிஞ்சலா பெத்த சட்டையா என்பவர் வேர்க்கடலை விற்றுக்கொண்டு வந்துள்ளார்.
இதைப் பார்த்த நேமானி பிரணவ் அனைத்து சிறுவர்களையும் போல வேர்க்கடலை கேட்டுள்ளான். இதையடுத்து அவரது தந்தை மோகன் அங்கிருந்த சட்டையாவிடம் வேர்கடலை வாங்கியுள்ளார்.

பணம் வேண்டாம்
ஆனால், அதன் பின்னரே மோகன் தனது பர்ஸை மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்துள்ளார். மற்றவர்களிடமும் அப்போது பணம் இருக்கவில்லை. இதனால் மோகன் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பியுள்ளார். அவர்கள் இருக்கும் தர்ம சங்கடமான சூழலைப் புரிந்துகொண்ட சட்டையா, 'பரவாயில்லை.. வேர்க்கடலைக்குப் பணம் வேண்டாம்' என்று கூற அங்கிருந்து நகரத் தொடங்கியுள்ளார். இருப்பினும், பணத்தைக் கண்டிப்பாகத் திரும்ப அளிப்போம் என மோகன் உறுதி கூறி, சட்டையா உடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

கண்டுபிடிக்க முடியவில்லை
மறுநாள் அதே இடத்திற்குப் பணத்துடன் சென்ற போது, சட்டையாவை அங்குக் கண்டறிய முடியவில்லை. மோகன் குடும்பத்தினர் அமெரிக்காவில் வசிக்கும் என்ஆர்ஐ குடும்பத்தினர். அவர்கள் அப்போது உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டியிருந்ததால், அவர்களால் சட்டையாவை அப்போது தேட முடியவில்லை. இருப்பினும், சட்டையாவுக்கு வேர்க்கடலைக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் திரும்ப அளித்தாக வேண்டும் என்பதில் மோகனும் அவரது குடும்பத்தினரும் உறுதியாக இருந்தனர்.

11 ஆண்டுகள்
அப்படியே காலங்கள் உருண்டோடியது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரணவ் மற்றும் அவரது சகோதரி சுசிதா எப்படியாவது சட்டையாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதற்காக அவர்களின் தந்தை மோகன் ஆந்திராவில் உள்ள தனது நண்பரான காக்கிநாடா நகர எம்எல்ஏ சந்திரசேகர் ரெட்டியிடம் உதவி கேட்டுள்ளார்.

உதவிய எம்எல்ஏ
இதையடுத்து அவரும் என்ன நடந்தது என்பதை விவரித்து சட்டையா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அப்போது சட்டையாவின் சொந்த கிராமமான நாகுலப்பள்ளியைச் சேர்ந்த சிலர், எம்எல்ஏ சந்திரசேகர் ரெட்டியை தொடர்பு கொண்டுள்ளனர். சட்டையா சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவில் இருந்து ஆந்திரா வந்த பிரணவ், சுசிதா இருவரும் சட்டையாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களிடம் 25,000 ரூபாயை வழங்கினர்.

ரூ 25 ஆயிரம்
பல கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு கடனை திரும்பச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நபர்களுக்கு மத்தியில், சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வேர்க்கடலைக்கான காசை வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து கொடுத்த இவர்களை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்கள் சட்டையாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications