தியேட்டர்களில் படம் பார்க்க வருவோரிடம்.. பார்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம்! தடை போட்ட ஐகோர்ட்
ஹைதராபாத்: தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் படம் பார்க்கச் செல்லும் போது, தியேட்டர்களில் வாகனங்களை நிறுத்த தனியாக நாம் பார்கிங் கட்டணத்தைச் செலுத்துவோம். ஆனால், இதுபோல பார்கிங் கட்டம் வசூலிப்பது சட்டவிரோதமானது எனச் சொல்லி, இதற்குத் தெலுங்கானா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நாம விரிவாகப் பார்க்கலாம்!
நமது நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் தியேட்டர்களில் எப்போதுமே பார்கிங் கட்டணம் தனியாகவே வசூலிக்கப்படும். படம் பார்க்கச் செல்வோர் நிச்சயம் வண்டியை நிறுத்த வேண்டி இருக்கும். அப்படி இருக்கும்போது, பார்கிங்கிற்கு தனியாகக் கட்டணம் வசூலிப்பது என்ன லாஜிக் எனப் பலரும் கேள்வி எழுப்பியே வந்துள்ளனர். அதிலும் மால்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு எனக் கட்ட வேண்டும் என்பதால் கணிசமான தொகையை அதற்கே செலவிட வேண்டி இருக்கும்.

தனித் தனி கட்டணம்
படத்திற்குத் தனி டிக்கெட் கட்டணம், பார்கிங்கிற்கு தனி கட்டணம் என இப்படி இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்கிடையே தியேட்டர் பார்கிங் தொடர்பாகத் தெலுங்கானா உயர் நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதாவது மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எனப்படும் ஒற்றைத் திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதித்துள்ளது. நீதிபதி என்.வி. சரவண் குமார் மார்ச் 6ம் தேதி இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார். திரையரங்கு ஒன்று தன்னிடம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலித்ததாக ரமாவத் பிரேம் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி சரவண் குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சிங்கிள் ஸ்கிரீன்
சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் படம் பார்க்க வருவோரிடம் பார்கிங் கட்டணங்களை வசூலிக்க அனுமதி அளித்த 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. மனுதாரரான ரமாவத் பிரேம் குமார் சார்பில் விஜய் கோபால் என்ற வழக்கறிஞர் ஆஜரானார். அதில் அவர், "படம் பார்க்க வருவோரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் பார்கிங் கட்டணம் வசூலிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது" என்று வாதிட்டார்.
வாதம்
கட்டிட அனுமதி பெறவே வணிக நிறுவனங்கள் போதுமான மற்றும் பிரத்தியேக வாகன நிறுத்த இடத்தை கொண்டிருக்க வேண்டும் என்று தெலங்கானா நகராட்சிகள் சட்டம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. இதுபோல பார்கிங் வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதியே கொடுக்க முடியும் என்பதை இந்த விதி தெளிவாகச் சொல்கிறது. அப்படி இருக்கும்போது, இந்த விதியை மீறும் வகையில் பார்கிங் கட்டணம் வசூலுக்கு அனுமதி அளிக்கும் அரசாணை இருப்பதாக விஜய் கோபால் வாதிட்டார்.
தடை
மேலும், ஒரு பார்வையாளர் திரைப்படம் பார்க்க டிக்கெட் வாங்கிய பிறகு, தனியாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பது நகராட்சிச் சட்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத கட்டணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, அந்த குறிப்பிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களிடம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய, அனைத்து ஒற்றைத் திரையரங்குகளுக்கும் இந்த முடிவை மாநில அரசு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 6ஆம் தேதிக்கு மேல் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications