கண்றாவி ஹேர் ஸ்டைல்.. கெட்ட வார்த்தை பேசுறாங்க! புஷ்பா 2 பார்த்து கெட்டு போறாங்க..புலம்பிய ஆசிரியை
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா-2 படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய்விட்டதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா-2 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இணைந்து நடித்து இருந்தனர். புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலிலா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
முதல் பாகம் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. மேலும் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
தற்போது புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி இருந்த நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை செய்து வருகிறது. மாஸ் ஆக்சன் படமான புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்ததோடு, இந்தியாவிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை படைத்தது, ரீலீசான தேதியில் இருந்து இந்த படம் ரூ.1871 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய வசூல் சாதனை செய்தாலும் படம் பல விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. வெறும் மாஸ் மசாலாவை மட்டுமே வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் இருந்தது. முன்னதாக படம் வெளியிட்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானதும், அவரது மகன் கோமா ஸ்டேஜுக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அல்லு அர்ஜுனன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய் உள்ளதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பேசியது சமூக வலைதளங்களை பேசும் பொருளாகி உள்ளது. மாநில கல்வி ஆணையத்துடன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அந்த ஆசிரியை," தற்போது எல்லாம் அரசு பள்ளி மாணவர்களை கையாள்வது ரொம்ப கஷ்டமாக உள்ளது. நான் வேலை செய்யும் பள்ளிக் கூடத்தில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் புஷ்பா 2 படத்தை பார்த்து தான் கெட்டுப் போய்விட்டன. எந்த ஒரு பொறுப்பும் இன்றி அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆபாச பேச்சு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஹேர் ஸ்டைல் என அந்த படம் மட்டமாக இருந்தது. அதை பார்த்து மாணவர்களும் அதே போல ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். ஆபாசமாக பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது நானே தோற்பது போல் இருக்கிறது" என பேசி இருந்தார். தற்போது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications