"நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்போம்.." ராகுல் காந்தி திட்டவட்டம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இட ஒதுக்கீடு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனச் சொன்ன அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நமது நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் சாதி வாரியான இட ஒதுக்கீடு 50%க்கு கீழ் மட்டுமே இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இட ஒதுக்கீடு 50%க்கு மேல் இருக்கிறது.

இதற்கிடையே தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பேசிய ராகுல் காந்தி இட ஒதுக்கீடு தொடர்பாகவும் சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்தும் சில முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி: தெலுங்கானா காங்கிரஸ் சார்பில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சாதிப் பாகுபாடு என்பது இந்தியாவின் தனித்துவமான பிரச்சினை என்ற அவர், அநேகமாக உலகிலேயே மிக மோசமானது என்றும் தெரிவித்தார். மேலும், இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்த முடியாமல் இருக்கும் செயற்கை தடையைக் காங்கிரஸ் அகற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தெலுங்கானாவில் நவம்பர் 6ஆம் தேதி முதல் சாதி வாரியான கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தும் என்றும் இம்மாத இறுதிக்குள் கணக்கெடுப்பும் முடிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதிய பாகுபாடு: ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "இந்தியாவில் சாதிய பாகுபாடு தனித்துவமானது.. உலகின் மிக மோசமானது என்றும் சொல்லலாம். இப்போது நமது நாட்டில் நாட்டில் இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க முடியவில்லை. இதற்குச் செயற்கையான தடையை உருவாக்கியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அந்த தடையை நீக்குவோம்.
சாதிய பாகுபாடு எப்படி இருக்கிறது.. அது எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவும். எனவே, தெலுங்கானாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும், சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தெலுங்கானா ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
அஞ்சும் பிரதமர் மோடி: மாநில அரசு எடுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் சில குறைபாடுகள் இருக்கலாம்.. இருப்பினும், அதை எல்லாம் சரி செய்துவிடுவோம். கார்ப்பரேட் நிறுவனங்கள், நீதித்துறை மற்றும் ஊடகங்களில் எத்தனை தலித்கள், ஓபிசிகள், பழங்குடியினர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளப் பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் என்று புரியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுக்க சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதைக் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில் கூட ஆட்சிக்கு வந்தால் நாடு முழுக்க சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்துவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. ஜாதி ரீதியாக மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவிக்கிறது.
மேலும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தவும் அரசியலமைப்பைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications