பாலில் கலப்படம்.. பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்! ஆந்திராவில் நடந்த சோகம்!
ஹைதராபாத்: ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் நகரில் கலப்படம் செய்யப்பட்ட பாலைக் குடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
ராஜமுந்திரியில் உள்ள உள்ளூர் விற்பனையாளரிடம் இருந்து பாலை வாங்கி அருந்தியவர்கள் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கலப்பட பால் காரணமாக அவர்களுக்கு சிறுநீர் கழிக்க இயலாமை மற்றும் தீவிர சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஒய். ஸ்ரீகாந்த் கூறுகையில், "அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர் விநியோகித்த கலப்படப் பாலை அருந்தியதால் கடந்த இரு நாட்களில் 4 பேர் உயிரிழந்தனர்" என்றார். பால் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு குழுக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து பால், இரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கீர்த்தி சேக்குரி கூறுகையில், விசாரணையின் ஒரு பகுதியாக 42 கால்நடை மாதிரிகள் உட்பட இதுவரை 73 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வீடு வீடான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்றார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு நிலைமையை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கவும், கலப்படம் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலப்படப் பாலை உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சையும் வழங்குகிறோம் என்றார்.
முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். உணவுப் பாதுகாப்பு அமலாக்க அலட்சியம் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் குற்றம் சாட்டினார். கலப்படத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களில் பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க ஆய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications