முதல் முறையாக தென்பட்ட அரிய வகை நீல நிற காளான்கள்.. சமைக்கலாமா வேண்டாமா.. ஆய்வு சொல்வது என்ன?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காவால் புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள வனத்தில் முதல் முறையாக நீல நிறத்தில் காளான்கள் தென்பட்டன. இது சாப்பிடுவதற்கு உகந்ததா என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
காளான்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். அதில் பல வகைகள் உண்டு. சிப்பி காளான், பட்டன் காளான்களை கடைகளில் வாங்கி நாம் சமைத்து வருகிறோம்.

எனினும் மழை பெய்தால் சில மரங்களில் காளான்கள் முளைக்கும். அவற்றை சாப்பிடக் கூடாது என பலர் அறிவுறுத்தினாலும் அதை சாப்பிட்டு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும். அந்த வகையில் உண்ணும் தன்மை கொண்டதா என தெரியாமல் எந்த பொருளையும் சமைத்து சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கானாவில் முதல் முறையாக வானத்தின் நீல நிறத்தில் காளான்கள் முளைத்துள்ளன. கோமராம் பீம் அசீஃபாபாத் மாவட்டத்தில் உள்ள காகஸ்நகர் வனத்தில்தான் இந்த காளான்கள் உள்ளனர். இதே போன்ற நிறத்தினாலான காளான்கள் ஒடிஸா மாநிலத்தில் 1989 இலே முளைத்திருந்தன. அதுதான் இந்த நிற காளான்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக தென்பட்டது.
இதுகுறித்து காகஸ்நகர் வனத்துறை அதிகாரி வேணுகோபால் கூறுகையில் நீல நிறத்தில் தனித்துவமான காளான்களை புகைப்படமாக எடுத்து எனக்கு அனுப்பியுள்ளனர். இது நிறத்தில் மட்டும் வித்தியாசம் கிடையாது. இதன் குணாதிசயத்தில் கூட பல வித்தியாசங்கள் உள்ளன. இரவு நேரத்தில் அதிகமாக ஒளிரும் தன்மை கொண்டது.
இந்த காளான்கள் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவை. இந்த வகை காளான்களின் புகைப்படம் அந்நாட்டின் 50 டாலர் நோட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த வகை காளான்கள் நியூசிலாந்து நாட்டின் தேசிய பூஞ்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடலாமா என்பது குறித்து எந்த அதிகாரிப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. பொதுவாக மனங்களை கவரும் இயற்கையின் படைப்புகள் விஷத்தன்மையாக உள்ளன.
இந்த நீல நிற காளான்கள் பருவமழை காலத்தில்தான் அதிகம் காணப்படும். இந்த வகை காளான்கள் அரிய வகைகளாகவே இருந்தாலும் இவற்றால் காடுகளின் வாழ்வியல் அமைப்பு பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். இந்த வகை காளான்கள் ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

இந்த காளான்கள் குறித்து ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ஜெகதீஷ் பத்துலா கூறுகையில் காளான்கள் மருத்துவ குணம் கொண்டது. காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் சக்தி உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீல நிற காளான்கள் ஸ்கை ப்ளூ மஸ்ரூம் என அழைக்கப்படுகிறது. இந்த காளான்களின் செவுள்களில் இளஞ்சிப்பு முதல் ஊதா நிறங்கள் வரை உள்ளன.
இவை விஷத்தன்மை கொண்டதா என கண்டறியப்பட்ட பிறகுதான் உணவில் சேர்க்க முடியும். இதை ஆய்வு செய்து வருகிறோம். தொற்றுநோய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தொடர்பான நிலைமைகள் உள்பட பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்துகளை இதன் மூலம் உருவாக்க முடியுமா என்றும் மருந்து தயாரிப்பதற்கு இது மூலகாரணியாக அமையுமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே ஆராய்ச்சிகளின் முடிவு வரும் வரை காடுகளில் நீல நிற காளான்கள் தென்பட்டால் அவற்றை பொதுமக்கள் உடனடியாக சமைத்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications