வாரே வா.. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எம்.பிக்களை வேட்பாளராக களமிறக்கும் பாஜக- கேசிஆர் சமாளிப்பாரா?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எம்.பி.க்களை வேட்பாளராக களமிறக்கி ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தர பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களின் 119 எம்.எல்.ஏக்கள் தெலுங்கானாவில் களமிறக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் தொகுதிகளில் பயணம் செய்து மக்களின் கருத்துகள், வேட்பாளர்கள் யாராக இருந்தால் வெல்லும் வாய்ப்பு என்பதை எல்லாம் இந்த எம்.எல்.ஏக்கள் குழு ஆய்வு செய்ய இருக்கிறது.
இதனிடையே தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை செப்டம்பர் முதல் வாரம் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாம். மேலும் இம்முறை சிட்டிங் எம்.பி.க்கள் பலரையும் வேட்பாளர்களாக களமிறக்கப் போகிறதாம் பாஜக. பிஆர்ஸ், காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் அதேநேரத்தில் பாஜகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளதாம்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் சிட்டிங் எம்பி பண்டி சஞ்சய், கரீம்நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளாராம். தர்மபுரி அரவிந்த், சோயம் பாபு ராவ் ஆகிய எம்.பி.க்களும் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றனராம். அதேபோல முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என ஹெவி வெய்ட் தலைவர்களை தேர்வு செய்து வேட்பாளர்களாக அறிவிக்கப் போகிறதாம் பாஜக.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் சவால் தரும் வகையில்தான் வேட்பாளர்கள் தேர்வில் இவ்வளவு சீரியசாக இருக்கிறதாம் பாஜக. லோக்சபா தேர்தலின் போது தெலுங்கானாவில் சில இடங்களையாவது கைப்பற்ற இந்த பார்முலா உதவக் கூடும் என்பதும் பாஜக மேலிடத்தின் கணக்காம். பாஜகவின் இந்த வியூகத்தை முதல்வர் கேசிஆர் எப்படி எதிர்கொள்வார்? என்பது தெலுங்கானா தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications