என்ன தெலுங்கானா அரசை கவிழ்க்க போறீங்களா.. காத்துக்கிட்டு இருக்கேன் வாங்க - பாஜகவுக்கு கேசிஆர் சவால்!
ஹைதராபாத் : அடுத்ததாக தெலுங்கானா அரசை கவிழ்க்கப் போவதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில், அப்படி செய்தால் நானும் மத்திய பாஜக அரசை கவிழ்க்க வாய்ப்பு ஏற்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க அவர் செல்லவில்லை.
இதுகுறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்த நிலையில், எங்கள் அரசை கவிழச் செய்யுங்கள். அதன் பிறகு டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க எங்களால் முடியும் என பதிலடி கொடுத்துள்ளார் சந்திரசேகர் ராவ்.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாஜகவும் சிவசேனா அதிருப்தி எம்.எக்.ஏக்களும் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். மகாராஷ்டிராவை தொடர்ந்து பாஜக ஆட்சி இல்லாத மற்ற மாநிலங்களிலும் இதே நிலை ஏற்படும் என பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

ஒருமுறை கூட வரவேற்கவில்லை
இந்நிலையில், இன்று ஐதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்வரான சந்திர சேகர் ராவ் செல்லவில்லை. மாறாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரிச் சென்ற எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை, சந்திரசேகர் ராவ் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். கடந்த 6 மாதத்தில் மட்டும் இன்றுடன் சேர்த்து பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தெலுங்கானா சென்றுள்ளார். இந்த 3 முறையும் பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகர் ராவ் வரவேற்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு பேனர்கள்
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன. இதற்கு ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். எங்களுக்கு கேசிஆர் போதும்; மோடி வேண்டாம். கேசிஆர் போதும்; கேசிஆர் மட்டுமே போதும். மோடி வேண்டாம்; மோடி எப்போதும் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பேனர்களில் Bye Bye Modi என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயத்தில் இருக்கிறார் கேசிஆர்
பிரதமரை வரவேற்பதை புறக்கணித்துள்ள சந்திரசேகர் ராவை அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது மகன் முதலமைச்சர் ஆகாததால் ஏமாற்றமடைந்துள்ள கேசிஆர் பிரதமரை வரவேற்கவில்லை, எதிர்காலத்திலும் பாஜகவால் தனது மகன் முதலமைச்சராக முடியாது என்ற அச்சத்தில் கேசிஆர் இருந்து வருகிறார். பாஜக தெலுங்கானாவில் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், அது தனது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சத்திலும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்ற பயத்திலும் கேசிஆர் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசை கவிழ்ப்பேன்
யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்ற சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஹைதராபாத்தில் அமர்ந்திருக்கும் மத்திய அமைச்சர்கள் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தெலுங்கானா தான் என்கிறார்கள். சரி எங்கள் அரசை கவிழச் செய்யுங்கள். அதன் பிறகு நான் சுதந்திரமாகி விடுவேன். பின்னர் டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க எங்களால் முடியும். அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்." என பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications