தெலுங்கானா:ரூ1,000 கோடியில் பிரம்மாண்ட தனியார் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை- சென்னை ICF கதி?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ரூ1,000 கோடியில் பிரம்மாண்டமான தனியார் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையை அம்மாநில முதல்வர் கே..சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். இதனால் நாட்டின் முதலாவது பொதுத்துறை ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எப். மிக கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முதலாவது பொதுத்துறை ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைக்கப்பட்டது. பின்னர் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்த பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனங்களை விரிவாக்கம் செய்யாமல் அரசியல் காரணங்களுக்காக ரயில் பெட்டி தயாரிப்புகளிலும் தனியார் துறையை மத்திய அரசு அனுமதித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ரூ1,000 கோடியில் பிரம்மாண்டமான தனியார் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இன்று தொடங்கி வைத்தார். தெலுங்கானாவின் கொண்டகலில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தெலுங்கானாவின் Medha Servo மற்றும் சுவிட்சர்லாந்தின் Stadler Rail ஆகியவை இணைந்து இந்த தொழிர்சாலையை அமைத்துள்ளன. இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலையாக இது அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை 2,500 பேருக்கு பணி வாய்ப்புகளை வழங்குகிறது.

அதேநேரத்தில் இத்தகைய தனியார் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை உருவாவதன் மூலம் சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஐசிஎப் தொழிற்சாலையின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தொழிலாளர்களின் பெரும் அச்சமாகவும் உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications