தெலங்கானாவில் காலியாகும் கேசிஆர்! 78 தொகுதிகளை வெல்லும் காங்கிரஸ்! சாணக்யா கருத்து கணிப்பு
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கட்சி 67 முதல் 78 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடிக்கும் என சாணக்கியாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கனாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. 63.98 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இந்த தேர்தலில் தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ்-பிஆர்எஸ் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. சாணக்கியா சார்பில் வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 67 முதல் 78 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம் என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறாக தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி 22 முதல் 31 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியிடம் பிஆர்எஸ் 10 ஆண்டு ஆட்சியை பறிகொடுத்து ஹாட்ரிக் சாதனை படைக்காமல் அதிகாரத்தை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்பாஜக 6 முதல் 9 தொகுதிகளிலும், ஓவைசி கட்சி 6 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முதலே தெலங்கானாவில் பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என கூறப்பட்டு வந்தது. அதனை இந்த கருத்து கணிப்பு பிரதிபலித்துள்ளது. அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியிடம் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என சாணக்யா சார்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications