"காங்கிரஸ்" அமோக வெற்றி.. 116 நகராட்சிகளில் 79ல் வெற்றி.. பரிதாப நிலையில் பிஆர்எஸ் - பாஜக
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 116 நகராட்சிகளுக்கும், 7 மாநகராட்சிகளுக்கும் கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 116 நகராட்சிகளில் 79 நகராட்சிகளையும், 7 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. அதேவேளையில், முன்னாள் முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியும், பாஜகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் தெலுங்கானாவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள 116 நகராட்சிகள், 7 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.

கடந்த 11ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். மொத்தம் 73.01 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
3 கட்சிகள் இடையே போட்டி
இந்த தேர்தலில் 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள முன்னாள் முதல்வர் கேசிஆர் எனும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் பாஜக இடையே போட்டி நிலவியது.
முழு ரிசல்ட் வெளியானது
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தொடங்கினர். பிஆர்எஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கினர். தற்போது முழு ரிசல்ட் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி ரிசல்ட் விவரம்
அதன்படி மொத்தமுள்ள 7 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ஒரு மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில் 2 மாநகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2 மாநகராட்சிகளில் தொங்கு ரிசல்ட் கிடைத்துள்ளது. தெலுங்கானாவில் பாஜகவே ஒரு மாநகராட்சியை கைப்பற்றி நிலையில் முன்னாள் முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு ஒரு மாநகராட்சி கூட கிடைக்கவில்லை.
நகராட்சி ரிசல்ட் விவரம்
அதன்படி 116 நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி 79 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. முன்னாள் முதல்வர் கேசிஆர் எனும் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 25 நகராட்சிகளையும், பாஜக 4 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. 8 நகராட்சிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு நகராட்சிகளாக 8 உள்ளன.
வார்டு வாரியாக ரிசல்ட்
மொத்தம் 2,836 வார்டுகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 1,490 வார்டுகளிலும், பிஆர்எஸ் கட்சி 759 வார்டுகளிலும், பாஜக 277 வார்டுகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 54 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 வார்டுகளிலும்,சுயேச்சைகள் 171 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கொண்டாட்டம்
இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஹேப்பியாக வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த வெற்றியை இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். சமீபத்தில் தான் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
அந்த வரிசையில் தற்போது தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications