தெலுங்கானா அதிர போகுது.. இன்னும் ஐந்தே நாள்! கேசிஆர் கையில் உள்ள பேப்பர்! உற்று பார்க்கும் காங்கிரஸ்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அபார வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் கேசிஆர் கட்சி மெகா பிளானை இறக்க உள்ளது.
தெலுங்கானாவில் இப்போது கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது அக்கட்சித் தலைவர் கேசிஆர் முதல்வராக இருக்கிறார்.

ஆனால், இந்த முறை அங்கே ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அரசுக்கு எதிரான மனநிலை, உள்ளூர் தலைவர்கள் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை கேசிஆர் கட்சிக்குப் பெரிய சவால் காத்திருக்கிறது.
தெலுங்கானா: தெலுங்கானாவில் வரும் நவ. 30ஆம் தேதி நடைபெறும் நிலையில், அங்கே மாநிலத்தில் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முயன்று வருகிறது. இருப்பினும், இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக இல்லை. உள்ளே 1008 சிக்கல்கள் இருந்தாலும் கூட கேசிஆர் என்ற ஒரு நபரை வைத்து வாக்கு வாங்கி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்று நம்புகிறது பிஆர்எஸ்.
பிஆர்எஸ் கட்சிக்கு முக்கிய பலமே அம்மாநில முதல்வரும் கட்சித் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் தான். தெலுங்கானா மாநிலம் உருவாக முக்கிய காரணமாக இருக்கும் கேசிஆர், அம்மாநில மக்களால் மிகப் பெரிய தலைவராகப் போற்றப்படுகிறார். விவசாயிகளுக்கு அவர்கள் கொண்டு வந்த ரைது பந்து மற்றும் புதிதாகக் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு வழங்கப்படும் கேசிஆர் கிட்ஸ் திட்டங்கள் இவரது கட்சிக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
பெரிய சிக்கல்: கேசிஆர் ஆட்சியில் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தெலுங்கானா கணிசமாக முன்னேறியுள்ளது. மேலும், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளை வைத்துள்ளதால் கடந்த 9 ஆண்டுகளில் பல முக்கிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. மாநிலத்தின் சட்ட ஒழுங்கும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பெரியளவில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லை.
கேசிஆர் மகனும் ஐடி துறை அமைச்சரான கே.டி.ராமராவ் நேரடி கட்டுப்பாட்டில் ஐதராபாத் இருக்கிறது. ஹைதராபாத்தில் பல முக்கிய முதலீடுகள் வந்துள்ளது. நகரின் உட்கட்டமைப்பும் வேற லெவலில் முன்னேறி இருக்கிறது. அதேநேரம் இதுவே அவர்களுக்கு எதிராகவும் இருக்கிறது. அதாவது கேசிஆர் முதல்வர், அவரது மகன் மாநில அமைச்சர், அவரது மகளுக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் என இருப்பதால் குடும்ப ஆட்சி என்ற பிம்பமும் வந்துவிட்டது.
காங்கிரஸ் வளர்ச்சி: அதேநேரம் ஆளும் கேசிஆர் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை வேகமாக அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதன் காரணமாகவே தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் அங்கிருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமாகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கேசிஆர் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று சொல்லி பிஆர்எஸ் எம்எல்ஏ ரேகா நாயக் கட்சியில் இருந்து விலகினார்.
இப்படி கேசிஆர் கட்சிக்கே 1008 பிரச்சினைகள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் இங்கே வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாகக் கடந்தாண்டு ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் 6 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், அது அவர்கள் ஆதரவைப் பல மடங்கு அதிகரித்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குப் பதில் கொடுக்கும் வகையில் கேசிஆர் மெகா பிளான் ஒன்றை போட்டுள்ளார்.
கேசிஆர் கையில் உள்ள பேப்பர்: அதாவது காங்கிரஸ் கட்சிக்குப் பதிலடி தரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் பிஆர்எஸ் கட்சியினர் உருவாக்கியுள்ளனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த வாக்குறுதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாக்குறுதிகள் இறுதி செய்யப்பட்டு கேசிஆர் கைகளுக்குச் சென்றுவிட்டன என்று கூறப்படுகிறது. இன்னும் 5 நாட்களில் அவர் வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளார்.
வரும் அக். 15ஆம் தேதி பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்தும் கேசிஆர், அன்றைய தினமே தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளாராம். காங்கிரஸுக்கு பதிலடி தரும் வகையில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் தேர்தலையே புரட்டிப் போடும் என்று பிஆர்எஸ் கட்சி நம்புகிறது. மேலும், காங்கிரசுக்கு எதிரான பிரசாரங்களையும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இத்துடன் கேசிஆருக்கு எனத் தனியாக மக்களிடையே ஆதரவு இருப்பதால் இதை வைத்து தங்களால் வெற்றி பெற முடியும் என பிஆர்எஸ் நம்புகிறது.












Click it and Unblock the Notifications