வெறுப்பு மற்றும் பொய்களைப் பரப்பும் பாஜக! நாட்டில் இருந்தே நீக்கப்பட வேண்டும்.. விளாசும் கேசிஆர்
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தொடர்ந்து பாஜகவை சாடி வரும் நிலையில், ஆளும் பாஜகவை ஓட ஓட விரட்டுவேன் என்றும் மீண்டும் சீண்டும் வகையில் பேசியுள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
குறிப்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

தெலங்கானா முதல்வர் கேசிஆர்
காங்கிரஸ் கட்சிக்கு இணையாக நாட்டில் உள்ள இதர பிராந்திய எதிர்க்கட்சிகளும் பாஜகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. மாநில உரிமைகளைப் பறிப்பதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன் வரை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தப் பட்டியலில் சமீபத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வும் இணைந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக பாஜக பற்றி நேரடி விமர்சனத்தைத் தவிர்த்து வந்த சந்திரசேகர ராவ், கடந்த சில நாட்களாக பாஜகவை நேரடியாக விமர்சித்துப் பேசத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து தாக்கு
சமீபத்தில் கூட, ஹைதராபாத்தில் நடைபெற்ற ராமானுஜர் சிலை திறப்பு விழாவுக்கு சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. அரசின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி அல்லாத காரணத்தால் அதற்குச் செல்லவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டாலும் பாஜக எதிர்ப்பே சந்திரசேகர் ராவின் செயலுக்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும், விவசாய திருத்தச் சட்டங்கள் தொடங்கி ஹிஜாப் விவகாரம் வரை பாஜகவைக் கடுமையாகச் சாடி வருகிறார்.

ஓட ஓட விரட்டுவேன்
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனநாயகத்திற்கு பாஜக மதிப்பளிக்கவில்லை என்றும் ஆளும் பாஜகவை ஓட ஓட விரட்டுவேன் என்றும் சாடியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "மக்கள் ஆதரவு பெறாத மாநிலங்களில் அவர்கள் ஏன் ஆட்சி அமைத்தார்கள்? வாட்ஸ்அப் மூலம் பொய்களை பாஜக பரப்பி வருகிறது. நாடு முழுவதும் மத உணர்வுகளைத் தூண்டி வருகிறது. நமக்குப் புதுவிதமான சிந்தனைப் போக்கு தேவை. முன்னோக்கிச் செல்ல வகுப்புவாத கருத்துக்களைப் புறந்தள்ள வேண்டும்" என்றார்.

சர்ச்சை
2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்றதற்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்குப் பதில் அளிப்பதாகக் கூறி அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியிடம் பாஜக எப்போதாவது ஆதாரம் கேட்டுள்ளதா என்ற ரீதியில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குக் காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

என்ன தவறு
இது தொடர்பாக கேசிஆர் பேசுகையில், " இதுதான் உங்களது கலாசாரமா? இது நம்முடைய கலாசாரம் அல்ல. பாஜக தலைவர் நட்டா அவரை உடனடியாக மாற்ற வேண்டும். சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்றதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. நான் கூட அதற்கான ஆதாரங்களைக் கேட்கலாம். தேர்தலுக்கு முன்னதாக எல்லைகளில் ஏற்படும் பதற்றங்கள் குறித்து அனைவருக்கும் அச்சம் உள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பாஜக எப்படி அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறது?

ராகுல் காந்திக்கு ஆதரவு
ராகுல் காந்தியின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். பாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டுக்காக அவரின் கொள்ளுத்தாத்தா ஜெயிலுக்கு சென்றுள்ளார். இப்படி இருக்கையில் பாஜக முதல்வர் இப்படிப் பேசலாமா? விவசாயிகளிடம் அவர்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் ஆவதற்கு முன்பு கோத்ரா கலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்டது. அப்போது இப்படி மீண்டும் நடைபெறாது என அவர், இஸ்லாமியர்களுக்கு வாக்குறுதி அளித்ததை யாரும் மறக்க மாட்டார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications