டிக்கெட் வாங்குவாங்க.. ஆனால் யாருமே ரயிலில் ஏற மாட்டாங்க.. ஊரே சேர்ந்து ரயில்வேக்கு சூப்பர் செக்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஒரு ஸ்டேசனில மக்கள் டிக்கெட் வாங்குகிறார்கள்.. ஆனால் ரயிலில் யாருமே ஏறுவது இல்லை.. இது என்னடா புதுசா இருக்கு.. ஊரே ஒன்றுகூடி இந்த வேலையை செய்வது ஏன் என்பதை விசாரித்தால் சுவாரஸ்யமாக உள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்பது இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று, இங்கு எல்லா ரயில்களுமே நின்று செல்லும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று செல்லும்.. ஆனால் எல்லா ரயில்களும் நின்று சென்றாலும், அந்த ஊரை சுற்றி பல கிலோ மீட்டருக்கு எந்த ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிற்காது. இந்நிலையில் இவ்வளவு பெரிய ரயில் வழித்தடம் இருந்தும் வாரங்கல் போய் தான் ஏற வேண்டிய நிலையில் அந்த பகுதிகள் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் வாரங்கல் மாவட்டத்தில் நெகொண்டா என்ற ரயில் நிலையம் வாரங்கல்லில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு பலனாக ஹைதராபாத் செல்லும் சில ரயில்களை தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் நிறுத்தத்தை நிரந்தரமான ரயில் நிறுத்தமாக மாற்ற விரும்பிய அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சூப்பர் வேலை செய்திருக்கிறார்கள். இதுபற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவினை இப்போது பார்ப்போம்.
"இந்த நெகொண்டா ரயில் நிலையத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் பொதுமக்களால் வாங்கப்படுகிறது, ஆனால் யாரும் பயணிக்க பயன்படுத்துவதில்லை. அவர்கள் பயணம் செய்யாவிட்டால் ஏன் ரயிலில் ஏற டிக்கெட் வாங்குகிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டா தொகுதிக்கான ஒரே நிறுத்தம் நெகொண்டா ரயில் நிலையம். ஆனால், திருப்பதி, ஹைதராபாத், டெல்லி, ஷீரடி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் அங்கு நிற்பது இல்லை. இதனால் இந்த ரயிலில் பயணிக்க விரும்பும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலும் அண்மையில் போதிய மக்கள் ஏறுவதோ இறங்குவதோ இல்லை என்று நிறுத்தப்படவில்லை. இதனால் அங்கு நிலைமை மோசமாகிவிட்டது
இதனிடையே சமீபத்தில் செகந்திராபாத்தில் (ஹைதராபாத் மெயின் ரயில் நிலையம்) இருந்து குண்டூருக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பலமுறை பயணிகளின் கோரிக்கையின் காரணமாக நெகோண்டாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.. என்ன நிபந்தனை என்றால், மூன்று மாதங்களுக்கு வருமானம் கிடைத்தால் மட்டுமே, முழுமையாக நிறுத்தப்படும்; இல்லையெனில், அவர்கள் அதை ரத்து செய்வார்கள் என்பது தான்..
தங்கள் ஊரில் ரயில் நிறுத்தத்தை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள நெகோண்டா கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டார்கள். அவர்கள் 'நெகொண்டா டவுன் ரயில்வே டிக்கெட் மன்றம்' என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, சுமார் 400 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள்.
அவர்கள் ரூ. 25 ஆயிரம் வரை நன்கொடை வழங்கினார்கள். இதன் மூலம், அவர்கள் நெகொண்டாவில் இருந்து கம்மம், செகந்திராபாத் மற்றும் பிற இடங்களுக்கு தினசரி ரயில் டிக்கெட்டுகளை மக்கள் வாங்குகிறார்கள். ஆனால் ரயிலில் ஏறி யாரும் பயணிப்பது இல்லை.. ரயில்வே ஸ்டேஷனுக்கு வருமானத்தைக் காட்டவே இப்படிச் செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் நிற்கும் வகையில் செயல்பட திட்டமிட்டுள்ளார்கள்" இவ்வாறு அந்த பத்திரிக்கையாளர் தனது பதிவில் கூறியுள்ளார்.
இந்த சுவாரஸ்யமான சம்பவம் தெலுங்கானா, ஆந்திராவை தாண்டி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. காரணம் இல்லாமல் இல்லை.. ரயில்வே ஒரு ரயில் அவ்வளவு எளிதில் ஊருக்கு இயக்கிவிடாது. புதிதாக ஒரு ரயிலை ஒரு வழித்தடத்தில் நீடித்தும்விடாது.. ஏன் ஒரு ஸ்டாப்பில் கூடுதலாக கூட நிற்காது... காரணம் அந்த ரயில் நிலையத்தால் வருவாய் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பது தான்..












Click it and Unblock the Notifications