நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! 1.87 கோடிக்கு ஏலம் போன லட்டு! விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆச்சர்யம்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பண்ட்லகுடாவில் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கு படைக்கப்பட்ட மெகா லட்டு, 1 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், அது தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 7ஆம் தேதி உலகெங்கும் வசிக்கும் இந்து மக்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இந்தியா முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் விஜர்சனம் செய்யப்பட்டது.

எல்லாக் கடவுள்களுக்கும் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஒரு சில தெய்வங்களின் பண்டிகைகளை நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படும் கடவுளாக விநாயகப் பெருமான் பார்க்கப்படுகிறார்.
குறிப்பாக ஒரே நாளில் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வேறு வேறு பகுதிகளில் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படும். ஆனால் விநாயகர் சதுர்த்தி ஒன்று மட்டுமே இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாக இருக்கிறது.
ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக கூறப்படுகிறது. அந்த நாளே விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வசிக்கும் இந்து சமூக மக்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை பிரதிஷ்டை செய்து மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாள் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் வட மாநிலங்களில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்.
குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பையில் விநாயகர் சதுர்த்து விழா மிக கொண்டாட்டத்தோடு ஒரு திருவிழா போல கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கும் மேலாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள பண்ட்லகுடாவில் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமர்சையாக நடைபெறும்.
குறிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு சுவாமிக்கு படைக்கப்படும் மெகா லட்டு ஆண்டுதோறும் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். இந்த லட்டை ஏலம் எடுப்பவர்கள் விநாயகரின் ஆசி தங்களுக்கு கிடைப்பதாக கருதுவார்கள். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை விட அந்த லட்டுவை ஏலம் விடும் நிகழ்ச்சி தான் மிகவும் பிரபலமாக நடைபெறும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்ததும் லட்டு ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மொத்தம் 100 பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஏலத்தில் கலந்து கொண்டனர். கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 60 லட்சம் ரூபாய் வரை ஏலம் போனது. எதை அடுத்து இந்த ஆண்டும் அந்த அளவுக்கே லட்டு ஏலம் போகும் என எதிர்பார்த்த நிலையில் சுமார் 1.87 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டு விட 61 லட்சம் ரூபாய் அதிகமாகும்.
கடந்த ஆண்டு 1 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு இந்த லட்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணம் ஆதரவற்றவர்களுக்கும், சாலையோர வசிக்கும் மக்களுக்கும் உணவு, உடை உள்ளிட்டவை வழங்குவதற்கு நன்கொடையாக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications