மஞ்சள் தூளில் கஞ்சா.. பக்கா பேக்கிங்.. தெலங்கானாவை அதிரவைத்த பெண் தாதா..!
ஹைதராபாத்: தெலங்கானாவில் மஞ்சள் தூள் பாக்கெட்டுகளில் அழகாக பேக்கிங் செய்து 100 கிராம் பொட்டலமாக பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததை கலால் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த பெண் தாதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கல்லூரிகள் மற்றும் ஐடி இளைஞர்கள் அதிகமுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா, கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற்று வருகின்றன. உள்ளூர் இளைஞர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. காவல் துறையினரின் கெடுபிடியால் புதிய புதிய ஐடியாக்களுடன் கஞ்சா விற்பனையாளர்கள் களத்தில் இறங்குகின்றனர்.
அந்த வகையில், கஞ்சா விற்பனையில் புதிய டிரெண்டாக மஞ்சள் தூள் பொட்டலத்தில் பக்காவாக பேக்கிங் செய்து துளியும் சந்தேகம் வராதபடி கஞ்சா விற்பனை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், தூல்பேட்டையைச் சேர்ந்தவர் நேஹா பாய். இவர் அட்லஸ் என்ற பெயர் கொண்ட மஞ்சள் தூள் பாக்கெட்டுகளின் மூலமாக அழகாக பேக்கிக் செய்து கஞ்சா கடத்தியுள்ளார். இதையடுத்து, நேஹா பாயை கலால் அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல, ஹைதராபாத்தில் விஸ்கி கலந்த ஐஸ்க்ரீமை ப்ரீமியம் ஐஸ்க்ரீம் என்று சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து, பள்ளி மாணவர்களை தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அரிகோ கேஃபே (Ariko Cade) என்ற ஐஸ்க்ரீம் பார்லர் உள்ளது. சமீபகாலமாக அந்த ஐஸ்க்ரீம் பார்லர் தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இதையடுத்து கலால் துறை அதிகாரிகள், அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் 11.5 கிலோ அளவிலான சுமார் 23 விஸ்கி ஐஸ்க்ரீம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். தெலங்கானாவில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் சாலையில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ரூ. 3.85 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரில் போதை ஐஸ்க்ரீம் விற்ற கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications