விபத்தை வேடிக்கை பார்க்க நின்ற மக்கள் மீது மோதிய சொகுசு கார்! 10 பேர் பரிதாப பலி.. குஜராத்தில் சோகம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்கேஜ்-காந்திநகர் (எஸ்ஜி) நெடுஞ்சாலையில் இஸ்கான் கோயில் ஒன்று இருக்கிறது. இக்கோயிலையொட்டி தேசிய நெடுஞ்சாலை பாலம் செல்கிறது. இந்த பாலத்தில் நேற்றிரவு 1.30 மணியளவில் மஹிந்திரா தார் ஜீப் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. இதனை வேடிக்கை பார்க்க மக்கள் கூடியுள்ளனர். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வந்த ஜாகுவார் சொகுசு கார் மக்கள் கூட்டத்தில் புகுந்துள்ளது.

இதனால் கூட்டத்திலிருந்த பலர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். இந்த கோர விபத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தையடுத்து மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. அதேபோல விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "நாங்கள் தார் ஜீப்பில் சிக்கியவர்களை காப்பாற்ற சாலையில் நின்றுக்கொண்டிருந்தோம். அபோது திடீரென வெள்ளை நிறத்தில் கார் ஒன்று வேகமாக எங்கள் கூட்டத்தை நோக்கி வந்தது. நான் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அனுமானிப்பதற்குள் விபத்து நடந்துவிட்டது. எங்களுடன் நின்றிருந்தவர்கள் 20-25 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ரத்தக்கறையாக இருந்தது" என்று கூறியுள்ளார். இச்சம்பவம் குஜராத் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications