அசையாத உருவத்தை 10 முறை கொத்திய பாம்பு.. 36 முறை பீர்பாட்டிலை இறக்கி.. மனைவியின் மறக்க முடியாத பரிசு
போபால்: உத்திரப் பிரதேசத்தில் உயிருள்ள பாம்பை, ஏவிவிட்டு 10 முறை கடிக்க வைத்துள்ளார் மனைவி.. இந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், மற்றொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக இளம் மனைவி தந்த வாக்குமூலத்தை கேட்டு, போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. கைதானவர்களிடம் தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்து மத்திய பிரதேசத்தில்?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டார்.. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடல் மீது பாம்பைவிட்டு, 10 முறை பாம்பை கொத்த வைத்துள்ளார் மனைவி..

பாம்புகள் பொதுவாக மனிதரை ஒருமுறை கொத்தினால், அந்த இடத்திலிருந்து உடனே சென்றுவிடுமாம்.. ஆனால் கணவரின் உடல் மீது பாம்பு நகராமல் இருந்துள்ளது.. அதிலும் 10 முறை பாம்பு கடித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான், கணவரை ஏற்கனவே கழுத்தை நெரித்து மனைவி கொன்றது தெரியவந்தது. இதனை இயற்கை மரணமாக மாற்ற, ரூ.1000 கொடுத்து பாம்பை விலைக்கு வாங்கி வந்தாராம் 21 வயது மனைவி.
புதரில் கிடந்த உடல்
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்னொரு சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. புர்ஹான்பூர் மாவட்டத்தில், கடந்த 13ம் தேதி காலை, போலீசுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், இந்தூர் - இச்சாபுர் சாலையில் உள்ள ஐடிஐ கல்லூரி எதிரே உள்ள புதரில் ஒரு ஆணின் சடலம் கிடக்கிறது என தகவல் தந்துள்ளனர்.. இந்தத் தகவலையடுத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு புதரின் இடையே இளம் வயது ஆணின் சடலம் கிடந்துள்ளது.. அதனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியாகிவிட்டனர்.. காரணம், உடம்பெல்லாம் 36 வெட்டுக்காயங்களுடனும், ரத்தத்துடனும் அந்த சடலம் கிடந்துள்ளது.. பிறகு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இந்த மரணம் தொடர்பான விசாரணையையும் தீவிரப்படுத்தினார்கள்.
புது மனைவி எங்கே
சடலமாகி கிடந்தவர் ஷாஹ்புர் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பதும், அவருக்கு சமீபத்தில்தான் 17 வயது சிறுமியுடன் திருமணம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புதுமனைவியை தேடினார்கள்..
ஆனால் அவர் காணாமல் போயிருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.. எனவே, ராகுல் மனைவி பற்றி விசாரித்தபோது, ராகுல் கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்தே அவரை காணவில்லை என்பது தெரிந்தது. அத்துடன், அந்த புதுமனைவிக்கு, யுவராஜ் என்ற காதலன் இருப்பதும் நிரூபணமானது. இதையடுத்து, காதலன் யுவராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வீடியோ கால் செய்த மனைவி
அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.. "எனக்கும், ராகுலின் மனைவிக்கும் இடையே உறவு இருந்தது. இருவரும் 2 பேரும் ராகுலை கொலை செய்ய முடிவு செய்தோம். கடந்த 12ம் தேதி ராகுலின் மனைவி தன்னுடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து ராகுலை கொலை செய்தார். கொலை செய்துவிட்டு, எனக்கு வீடியோ கால் செய்து ராகுலின் சடலத்தை காண்பித்தார்" என்றார்.
இந்த வாக்குமூலத்தையடுத்து, மீண்டும் ராகுலின் மனைவியை தேடும் படலம் ஆரம்பமானது. அப்போதுதான், ராகுல் மனைவி, லலித் உட்பட ஒரு சிறுவன் ஆகியோர் உஜ்ஜைனியில் இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் உஜ்ஜைனியில் தேடுல் வேட்டை பிடித்து 3 பேரையுமே சுற்றிவளைத்து கைது செய்தனர்..
ரோட்டோர டிபன் கடை
பிறகு ராகுலின் மனைவி தந்த வாக்குமூலத்தில், "சம்பவத்தன்று ராகுலை கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காக அன்றிரவு அவரிடம் அன்பாகப் பேசி, கடைக்கு அழைத்து சென்றேன். பிறகு வீடு திரும்பும்போது ரோட்டோர கடையில் 2 பேரும் சாப்பிட்டோம்.. ஏற்கனவே திட்டமிட்டப்படி லலித் மற்றும் சிறுவன் 2 பேரும் காத்திருந்தனர்.
ராகுலை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, ஐடிஐ கல்லூரி அருகேயிருந்த வேகத்தடையில் எங்களது பைக் ஏறி இறங்கியது. அப்போது என்னுடைய செருப்பு கீழே விழுநதுவிட்டதாக சொல்லி கீழே இறங்கிவிட்டேன். வண்டியை ராகுல் ஓரங்கட்டியதுமே, பினதொடர்ந்து வந்த லலித், அந்த சிறுவர் 2 பேரும் ராகுலை தங்கள் கையில் இருந்து மது பாட்டிலை கொண்டு தாக்கினார்கள்.. நானும் அவர்களுடன் சேர்ந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்தேன்.
அதிர்ந்து நின்ற போலீஸ்
அதில், ராகுல் நிலைகுலைந்து கீழே விழுந்து மயங்கினார். பிறகு என்னிடம் இருந்த மது பாட்டிலை உடைத்து அவரது உடலில் பல இடங்களில் கிழித்தேன். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ராகுலை, யுவராஜுக்கு வீடியோ கால் செய்து காட்டினேன். இறுதியாக, நான், லலித் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரும் ரயில் ஏறி உஜ்ஜைனுக்குத் தப்பி சென்றோம்" என்றார்.
புதுமனைவி தந்த இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்துபோய் உள்ளனர்.. இப்போது யுவராஜ் (20), லலித் (20), ராகுலின் மனைவியான 17 வயது சிறுமி, ஒரு சிறுவன் ஆகிய 4 பேருமே கைதாகி சிறையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications