உ.பி.யில் பயங்கரம்: 15 வயது சிறுமி பலாத்காரம் செய்ய முயன்று எரித்துக் கொலை
பரேலி: உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 6 பேர் அவரை தீ வைத்து எரித்தனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி கடந்த 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 6 வாலிபர்கள் வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் சிறுமி அவர்களை எதிர்த்து போராடவே அவர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் சிறுமி மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி ஷாஜஹான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பரேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் ரோஹில்கந்த் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.
தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்த சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பெற்றோருடன் சேர்ந்து வசிக்கத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications