161 அடி உயரம்.. 5 மண்டபம்! கண்ணை கவரும் சிற்பங்கள்! அயோத்தி ராமர் கோவிலின் ஸ்பெஷலே இதுதான்! ‛வாவ்’
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ‛வாவ்' சொல்ல வைக்கும் ராமர் கோவிலின் சிறப்புகள் குறித்த முக்கிய விஷயங்களை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை விரிவாக பட்டியலிட்டுள்ளது.
நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த தீர்ப்பை தொடர்ந்து கோவில் கட்டும் பணி தொடங்கியது.

கோவில் கட்டுமானத்துக்காக தனியாக ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை 2019ம் ஆண்டில் நாட்டினார். இதையடுத்த பணிகள் என்பது விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பிரதமர் மோடி: விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி கோவில் கருவறையில் நிறுவப்படும் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலையை எடுத்து வர உள்ளார். மேலும் கோவில் அறக்கட்டளை சார்பில் விழாவில் பங்கேற்க வரும்படி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் உள்ள சிறப்புகள் குறித்து கோவில் கட்டுமான பணிகளை கவனிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா அறக்கட்டளை சார்பில் இன்று முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
161 அடி உயர கோவில்: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் என்பது பாரம்பரிய நாகரா கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. வடமாநிலத்தில் ஏராளமான கோவில்கள் இந்த கட்டக்கலையில் தான் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் அமைய உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. ராமர் கோவில் கிழக்கு மேற்காக 380 அடி நீளமும், 250 அடி அகலமும் கொண்டது. கோவிலின் மொத்த உயரம் என்பது 161 அடியாகும். கோவிலில் பிரமிடு டவர் (சிகரம்) உள்ளது. அதன் மேற்பகுதியில் கலசம் வைக்கப்பட உள்ளது.
392 தூண்கள்: ராமர் கோவிலில் மொத்தம் 392 தூண்கள், 44 கதவுகள் இருக்கும். கோவில் தூண்கள் மற்றும் சுவர்கள் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கோவிலின் கர்ப்பகிரஹத்தில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்படுகிறது. முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பார் அமைக்கப்பட்டுள்ளது.
5 மண்டபங்கள்: கோவிலில் மொத்தம் 5 மண்டங்கள் இருக்கும். நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் என ஐந்து மண்டபங்களை ராமர் கோவில் கொண்டிருக்கும். கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் வந்து செல்ல வசதியாக சாய்தளங்கள், லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 732 மீட்டர் நீளம், 14 அடி அகலத்தில் பார்கோட்டா காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது.
பிற கோவில்கள்: கோவிலின் 4 மூலைகளிலும்நான்கு கோவில்கள் கட்டப்பட்டுள்னள. சூர்யா தேவ், தேவி பகவதி, கணேஷ் மற்றும் சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு திசையில் அன்னபூரணிகோவிலும், தெற்கு திசையில் அனுமன் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க சீதா கூப் எனும் கிணறு உள்ளது.
வால்மீகி மந்திர்: மேலும் கோவில் வளாகத்தில் மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யா ஆகியோருக்கான மந்திர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமர் கோவிலின் தென்மேற்கு பகுதியான குபேர் திலாவில் ஜடாயு நிறுவப்பட்டுள்ளதோடு சிவன் மந்திர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எங்கும் இரும்பு பொருள் பயன்படுத்தப்படவில்லை. இதன் அடிப்பகுதி என்பது 14 மீட்டர் தடிமனில் ரோலர்-காம்பாக்டட் கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது செயற்கை பாறையின் தோற்றத்தை காட்டுகிறது.
தங்கும் இடம்: இதுதவிர கோவிலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீவிபத்து ஏற்பட்டால் தண்ணீர் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி 25,000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரீகர்கள் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, லாக்கர் வசதியுடன் கட்டப்படுகிறது. மேலும் குளிக்கும் வசதி, கழிவறை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றையும் யாத்ரீகர்கள் வசதி மையம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications