வாரணாசி அருகே கங்கையாற்றில் படகு விபத்து: 18 பேர் மாயம்!
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி அருகே கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 18 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரைச் சேர்ந்த 40 கூலி தொழிலாளர்கள் வாரணாசியில் வேலை செய்து விட்டு, கங்கை ஆற்றில் படகின் மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ரோஹனியா என்ற பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது, நீரோட்டம் அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படகில் இருந்த 22 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். இதில், ஆண்கள், பெண்கள் என 18 பேர் கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications