சென்னை தம்பதி + சுற்றுலா பயணிகளை மீட்ட இஸ்லாமிய சிறுமிகள்! கால் உடைந்தும் உயிரை பணயம் வைத்த சம்பவம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் கடந்த 22ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் தான் கால் உடைந்தும் கூட இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் 2 சிறுமிகள் உயிரை பணயம் வைத்து சென்னை தம்பதி உள்பட பல சுற்றுலா பயணிகளை காப்பாற்றியது பற்றிய நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் உள்ள பைசரன் புல்மேட்டில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர். அப்போது திடீரென்று சுற்றுலா தலத்துக்குள் நுழைந்து 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் மொத்தம் 26 பேர் இறந்தனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் என்பது இருநாடுகள் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், நம் நாட்டின் படை வீரர்களுக்கும் இடையே 2வது நாளாக இன்றும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் தான் பயங்கராவதிகளின் துப்பாக்கிச்சூட்டின்போது கால் உடைந்தாலும் கூட சென்னை தம்பதி, ஒரு குழந்தை என்று 3 பேரை இஸ்லாமிய சிறுமிகள் காப்பாற்றியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜம்மு காஷ்மீரில் வசித்து வருபவர் ரூபினா மற்றும் மும்தாஜ். இவர்கள் குஜ்ஜார் -பகிர்வால் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள். இவர்கள் 2 பேரும் வெறுமனே மண்ணால் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். ரூபினாவுக்கு 14 வயது ஆகிறது. மும்தாஜ்க்கு 16 வயது ஆகிறது. மும்தாஜ்க்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ரூபினா முயல் வளர்த்து வருகிறார். இந்த முயலை வைத்து போட்டோ எடுக்க சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிக்கிறார்.
அதுமட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடங்களை சுற்றி காண்பிக்கும் பணியையும் அவர் மேற்கொண்டு வருகிறார். சம்பவத்தன்று சென்னை தம்பதியை அவர் அழைத்து சென்றிருந்தார். இதனால் துப்பாக்கிச்சூடு நடந்தபோது ரூபினா மற்றும் மும்தாஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர். துப்பாக்கிச்சூடு நடந்ததும் பொதுமக்கள் சிதறி ஓடினர். அப்போது மும்தாஜும், ரூபினாவும் பயந்து ஓடவில்லை. மாறாக சுற்றுலா பயணிகளுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். தங்களின் உயிரை பணயம் வைத்து அங்கேயே நின்றனர். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழியை அவர்கள் காண்பித்தனர்.
அதுமட்டுமின்றி கால் உடைந்து இருந்தாலும் கூட மும்தாஜ் சிறுவனை தனது தோளில் தூக்கி வைத்து பாறைகளுக்கு மத்தியில் உள்ள தனது மண் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதேபோல் சென்னை தம்பதி உள்பட சுற்றுலா பயணிகளை ரூபினா தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று பாதுகாத்தார். வீட்டில் அவர்களுக்கு தண்ணீர் வழங்கினர். பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இதனால் சென்னை தம்பதி, ஒரு குழந்தை உள்பட பல சுற்றுலா பயணிகள் உயிர் பிழைத்தனர்.
இதுபற்றி ரூபினா கூறுகையில், ‛‛துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது நாங்கள் எங்களை பற்றி நினைக்கவில்லை. எங்களின் உயிரை விட சுற்றுலா பயணிகளின் உயிர் தான் முக்கியம் என்று கருதினோம். அவர்களால் நடக்க முடியாவில்லை. அவர்கள் பயந்துவிட்டனர். அங்கிருந்த அனைவரின் வாயில் இருந்து வந்த ஒரே வார்த்தை உதவி.. உதவி என்பது தான். இது எங்களின் மனதை மாற்றியது. சுற்றுலா பயணிகளை மீட்டு எங்களின் மண் வீட்டுக்கு அழைத்து வந்து தண்ணீர் கொடுத்தோம். மொத்தம் 3 முறை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு சென்று வந்தோம். ஒவ்வொரு நேரமும் பொதுமக்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். அதில் பலருக்கும் உதவி செய்தது ஹேப்பியாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications