20 வருட பாசப் போராட்டம்! இந்திய அப்பாவை கூகுள் மூலம் கண்டுபிடித்த ஜப்பானிய மகன்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இந்தியர் ஒருவருக்குப் பிறந்த ஜப்பானிய மகன் ஒருவர் அவரது தந்தையுடன் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.

21 வயதான ரின் தகாஹதா என்ற இளைஞர் ஜப்பானிய தாய்க்கும் பஞ்சாபைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஆவார். இவரது தாய் தந்தையிடமிருந்து விவாகரத்து பெற்றபோது ரின் ஒரு வயது சிறுவனாக இருந்தார். அப்போது அவருக்கு விவரம் தெரியாது. மனைவியிடம் இருந்து பிரிந்த பிறகு ரின் தகாஹதாவின் தந்தை சுக்பால் சிங் பஞ்சாப் மாநில அமிர்தசரசில் வந்து செட்டில் ஆகிவிட்டார். வளர்ந்து இப்போது 20 வயதை எட்டியிருக்கும் ரின் தனது தந்தையைப் பற்றி தாய் சச்சியே தகாஹதாவிடம் விசாரித்துள்ளார். அவர் அப்பாவின் புகைப்படங்கள், அவர் இந்தியாவில் எங்கு வசித்தார்? அவரது முகவரி என்ன? ஆகிய தகவல்களை தனது மகனிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

punjab japan

ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான மாணவர் ரின், தனது தந்தையின் புகைப்படத்தையும் முகவரியையும் எடுத்துக் கொண்டு கடந்த மாதம் 18 ஆம் தேதி அமிர்தசரசை வந்து சேர்ந்துள்ளார். இவரது கையில் ஃபதேகர் சூரியன் ரோட்டில் தந்தை வசித்து வந்த பழைய முகவரி இருந்துள்ளது.

ஆனால் அவரது தந்தையின் குடும்பம் அந்த முகவரியில் இல்லை. அவர் லோஹர்கா சாலையில் ஒரு புதிய முகவரிக்கு மாறிவிட்டார். அப்படி இருந்தும் விடாப்பிடியாக விசாரித்து தற்போதைய புதிய முகவரியைக் கண்டுபிடித்துவிட்டார் ரின். அங்கே சென்றபோது அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. அவரது தந்தையை அவர் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், ஒரு வயதில் பார்த்த மகனை மீண்டும் 21 வயதில் வளர்ந்து நின்ற மகனை அவரது தந்தையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தனது ஃபேமலி ட்ரீயை உருவாக்க வேண்டிய தேவை ரின்னுக்கு ஏற்பட்டது. அதைக் கொண்டே அவர் தந்தையைத் தேட தொடங்கி இருக்கிறார். ஏற்கெனவே பாதி ஃபேமலி ட்ரீயை அவர் வரைந்துவிட்டார். ஆகவே, பல உறவினர்களின் பெயர்களை அவர் நினைவில் வைத்திருந்துள்ளார். ரின் கடந்த ஆகஸ்ட் 15 அன்று அப்பாவின் பழைய முகவரியைத் தேடிச் சென்று கண்டுபிடித்துள்ளார்.

ஆனால், தந்தை சுக்பால் அவர் எதிர்பார்த்ததைப் போல் அங்கே இல்லை. தன் கையிலிருந்த முகவரி, மற்றும் தந்தையின் பழைய புகைப்படத்தைக் காட்டி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதை வைத்து உள்ளூர் பிரமுகர்கள் இவருக்கு உதவியுள்ளனர். ஆகஸ்ட் 19, 'ரக்ஷா பந்தன்' அன்றுதான் ரின் தனது தந்தையையும் ஒன்றுவிட்ட சகோதரி அவ்லீன் கவுரையும் சந்தித்துள்ளார்.

ரின் ஜப்பானிலிருந்து புறப்படும் போது ஒரு வயதாக தான் இருந்தபோது அவரது அம்மா, அப்பா சுக்பால் இவரை தூக்கி வைத்திருக்கும் குரூப் போட்டோவை அவர் கையில் கொண்டுவந்துள்ளார். அதைக் கொண்டு அவரது தந்தை தன் மகனை 20 ஆண்டுகள் கழித்து அடையாளம் கண்டுள்ளார். இது பற்றி ரின் தந்தை சுக்பால் சிங் கூறுகையில், “என் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கண்கலங்குகிறார்.

இவர் இப்போது குர்விந்தர்ஜித் கவுர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அமிர்தசரசில் வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு அவ்லீன் கவுர் என்ற மகள் உள்ளார். இவரது மனைவியும் மகளும் முழு மனதோடு ரின்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். தன் மகன் ரின்னை பொற்கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜப்பான் மகனும் இந்தியத் தந்தையும் 20 ஆண்டுகள் கழித்துச் சந்தித்த உணர்ச்சிகரமான சம்பவம் குறித்து ஒரு காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து இவர்கள் இப்போது இந்தியா முழுக்க தெரிந்துள்ளனர்.

தனது கடந்த காலத்தை விவரித்த சுக்பால், தாய்லாந்து விமான நிலையத்தில் முதல் மனைவியான சச்சியை சந்தித்ததாகவும், 2002 ஆம் ஆண்டு ஜப்பானில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஒரு வருடம் கழித்து ரின் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். “அவளும் நானும் ஆக்ரா, புது டெல்லியைச் சுற்றிப் பார்க்க இந்தியா வந்தபோது முதலில் விமானத்தில் சந்தித்தோம். விமானத்தில் எங்கள் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தன.

அப்படியே பொற்கோயிலையும் சுற்றிப் பார்க்கச் சொல்லி அவளிடம் அமிர்தசரஸ் வரை பயணத்தை நீட்டிக்கச் சொன்னேன். உடனே சம்மதித்து அமிர்தசரஸ் வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் என் குடும்பத்துடன் தங்கினாள். அவள் இங்கு தங்கியிருந்த காலத்தில் உள்ளூர் சுற்றுலாத் தலங்களைத் தவிரச் செங்கோட்டை, தாஜ்மஹால் போன்ற இடங்களைச் சுற்றிக் காட்டினேன். 2002இல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சுக்பால்.

இவர் ஜப்பானிய மொழியைக் கற்று அங்கு வேலை செய்ததாகவும், ஆனால் எங்களால் இணக்கமாக வாழ முடியவில்லை என்றும் சொல்கிறார். அதன்பின்னர் இவர் இந்தியா திரும்பியுள்ளார். இவரது மனைவி ஒருமுறை ரின்னுடன் இவரைப் பார்க்க வந்துள்ளார். பின்னர் ஜப்பானுக்குச் சென்றுவிட்டார். இவர்கள் 2004இல் பரஸ்பர விவாகரத்து பெற்றுள்ளனர். பின்னர் இவர் 2007 இல் மறுமணம் செய்து கொண்டார்.

“கடவுள் விருப்பத்தால்தான் நான் எனது மகனை மீண்டும் சந்தித்துள்ளேன். செப்டம்பர் 5 ஆம் தேதி கல்லூரி தொடங்க உள்ளது. ஆகவே செப்டம்பர் 1 முதல் 2 ஆம் தேதி வரை இங்கே என் மகன் இருப்பார்” என்கிறார் சிங். பிரிவுக்குப் பின்னர் இவர் இரண்டாவது மணம் செய்துகொண்டார். ஆனால் இவரது முதல் மனைவி திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது மகனுடன் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தச் சந்திப்பு பற்றி ரின், “அம்மா கொடுத்த முகவரியை வைத்து முதலில் கூகுளில் தேடினேன். அதன் மூலம் இடத்தைக் கண்டுபிடித்தேன். அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+