ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு அதிகாரிக்கு ஜனாதிபதியின் 'மெச்சத்தக்க விருது'!!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக லஞ்ச ஒழிப்பு மற்று ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜி.சம்பந்தத்துக்கு குடியரசுத் தலைவரின் ‘மெச்சத்தக்க விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி, காவல் துறையில் உயரிய விருதான மெச்சத்தகுந்த பணிக்கான விருது, வீரதீர செயலுக்கான விருது மற்றும் சிறந்த சேவைக்கான விருது ஆகியவைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 67வது குடியரசுத் தினத்தையொட்டி குடியரசுத் தலைவரின் சிறந்த சேவை மற்றும் மெச்சத்தக்க விருது சென்னையை சேர்ந்த சிபிஐ அதிகாரி பெருமாள் ராமகிருஷ்ணன் உட்பட 26 சிபிஐ அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
சிபிஐ பிரிவில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக 6 பேர் குடியரசு தலைவர் விருதும், 20 பேர் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க விருதும் பெறுகின்றனர். இதில் சென்னை சிபிஐ அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக இருப்பவர் பெருமாள் ராமகிருஷ்ணன். சிறப்பாக பணிபுரிந்ததற்காக இவருக்கு 'மெச்சத்தக்க விருது' வழங்கப்படுகிறது. அதேபோல ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரியாக பணியாற்றிய ஜி. சம்பந்தம், குடியரசுத் தலைவரின் ‘மெச்சத்தக்க விருது'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை
கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க, தமிழக லஞ்ச ஒழிப்பு மற்று ஊழல் தடுப்பு அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஜி. சம்பந்தம் 1997-ம் ஆண்டு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். குற்றப்பத்திரிக்கை தாக்கல், சாட்சிகள் விசாரணை, சொத்துகளின் மதிப்பீடு உள்ளிட்ட பணிகளை கவனித்தார்.

ஜி. சம்பந்தம்
சொத்துக்குவிப்பு வழக்கு 2004ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றப்பட்ட போது ஜி. சம்பந்தம் வழக்கை கண்காணிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பப் பட்டார். தினமும் நீதிமன்றத்துக்கு வந்து அன்றாட நிகழ்வுகளை அறிக்கையாக தயாரிக்கும் ஜி. சம்பந்தம் சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

மெச்சத்தக்க விருது
தற்போது உச்ச நீதிமன்றத் தில் நடைபெற்றுவரும் மேல் முறையீட்டு விசாரணையையும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை சார்பாக கவனித்து வருகிறார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பாக பணியாற்றிய இவருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க விருது வழங்குமாறு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து ஜி. சம்பந்தம் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த 2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான விருதை ஜி. சம்பந்தம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஜி ரவி ஐ.பி.எஸ்
இதேபோல மெச்சத்தகுந்த பணிக்கான விருதினை தமிழக காவல் துறையின் ஐ.ஜி.யும், ஆவின் நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான எம்.ரவிக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1991ம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆன எம்.ரவி, ஏற்கனவே சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதினை பெற்றவர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது பெரிய அளவில் சாதி கலவரத்தை தடுத்தவர் என்ற பெருமை பெற்ற எம்.ரவி, சமீபத்தில் பெய்த கனமழையின்போது, கள்ளச் சந்தையில் ஆவின் பாலை யாரும் பதுக்கி வைத்து விற்பனை செய்யாமல் தடுத்து, பால் சப்ளை சீராக இருக்க நடவடிக்கை எடுத்தவரவர் ஆவர்.












Click it and Unblock the Notifications