2ஜி ஒதுக்கீடு குறித்து மன்மோகன்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசித்த உண்மையை மறைத்த சிபிஐ- ஆ. ராசா வாதம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட கூட்டம் பற்றிய உண்மையை சிபிஐ உள்நோக்கத்துடன் மூடி மறைத்தது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் இறுதிக் கட்ட விசாரணையாக குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்களை முன்வைக்க நீதிபதி ஓ.பி. ஷைனி அனுமதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஆ. ராசா தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று அவரது சார்பில் வழக்கறிஞர் மனு சர்மா முன்வைத்த வாதம்:

- ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை தொடர்பான முடிவுகளை 2007-இல் அலைக்கற்றை விவகாரத்துக்கான மத்தியக் குழுவின் அப்போதைய தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியுடனும், அப்போதைய சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகனவதியுடனும் சேர்ந்து எடுக்கும்படி பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ராசாவுக்கு அறிவுறுத்தினார்.
- இதனடிப்படையில் 2007-ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் வாகனவதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொள்கையை செயல்படுத்துவது, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் போன்றவை தொடர்பாக மூவரும் விவாதித்தனர்.
- இது தொடர்பாக 2007-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் பிரணாப் முகர்ஜி, வாகனவதி ஆகியோருடன் நடந்த ஆலோசனையின் போது எடுத்த முடிவுகள் விளக்கப்பட்டது.
- ஆனால் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திய போது, ராசா குறிப்பிட்டது போன்ற கூட்டமே நடக்கவில்லை' என்று வாகனவதி கூறியதால், அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நடக்காத கூட்டத்தை நடந்ததாகக் கூறுகிறார் ராசா' என சிபிஐ குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டியது.
- அதே சமயம், அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றப் பொதுக் கணக்குகள் குழு (பிஏசி) ஆய்வு செய்தது. அப்போது, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி அவரே நேரடியாக பிரதமருக்கு 2007-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி எழுதிய கடிதம், அந்தக் கடிதத்துடன் கூட்டம் தொடர்பாக வாகனவதி அளித்த குறிப்பு ஆகியவை பொதுக் கணக்குகள் குழு ஆய்வறிக்கையின் முக்கிய ஆவணமாக இருந்தது.
- இந்த ஆவணங்களின் நகல்களைப் பெற்று அதை நீதிமன்றத்தின் பார்வைக்கு ராசா சமர்ப்பித்துள்ளார்.
- இந்த ஆவணங்களின்படி பிரணாப் இல்லத்தில் அவருடன் ராசாவும் வாகனவதியும் நடத்திய ஆலோசனை விவரம் உறுதியாகிறது.
- அலைக்கற்றை கொள்கை முடிவுகளை ராசா தன்னிச்சையாக எடுத்தார் என்ற சிபிஐ வாதம் இதன் மூலம் பொய்யாகிறது.
- ஆ. ராசாவின் கடிதம், பிரணாப் கடிதம், வாகனவதியின் குறிப்பு ஆகியவற்றின் விவரங்களை அப்போதைய பிரதமர் அலுவலக அதிகாரிகள் புலோக் சாட்டர்ஜி, டி.கே.ஏ. நாயர், பின்னி மகாஜன் ஆகியோர் பரிசீலித்து அதன் விவரம் சரியாக இருப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
- இந்த விவரங்கள் எல்லாம் ராசாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதை மறைத்து வழக்கை சிபிஐ ஜோடித்துள்ளது.
இவ்வாறு ஆ. ராசா தரப்பு வழக்கறிஞர் மனுசர்மா வாதிட்டார்.












Click it and Unblock the Notifications