பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 60 %பேர் கோடீஸ்வரர்கள்; 30% பேர் கிரிமினல்கள்!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 60 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள், 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதுவரை 469 வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் இந்த வேட்பாளர்களைப் பற்றி சர்வே மேற்கொண்டது.
மாதிரிக்கு 280 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வேட்பாளர்களில் ஏறக்குறைய 60 சதவீதம் பேர் ரு.1 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டவர்கள்.

கிரிமினல் குற்றவாளிகள்
இதில் 30 சதவீதம் பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் 13 சதவீதம் பேர் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மோசமான குற்றவாளிகள்
கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட 35 சதவீத பாஜக வேட்பாளர்களில் 17 சதவீதம் பேர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதேப்போன்று கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட 27 சதவீத காங்கிரஸ் வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

கொலை முயற்சி வழக்கு
நாட்டின் தலைநகரான டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சந்த் டோமர் மற்றும் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சதீஷ் துபே ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளன.

சட்டவிரோத குற்றச்சாட்டுக்கள்
கர்நாடக பா.ஜனதாவில் நிறுத்தப்பட்டுள்ள எடியூரப்பா மீது சட்டவிரோத கனிம சுரங்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதேப்போன்று சண்டிகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பவன் பன்சால், தனது மருமகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்.

அதில் என்ன தவறு
கிரிமினல் குற்றச்சாட்டு பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளதில் எந்த தவறும் இல்லை என்று இருகட்சிகளுமே கூறியுள்ளன.

அவர்கள் அப்பாவிகளாம்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சல்மாம் சாஷ் கூறுகையில், சட்டவிதிகளின்படி குற்றவாளி என அறிவிக்கப்படாதவரை ஒருவர் அப்பாவிதான் என்று கூறினார்.

குற்றச்சாட்டுகள் உண்மையாகுமா?
அதேப்போன்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மீனாஷி லெகி கூறுகையில்,"குற்றச்சாட்டு எனக் கூறப்படும் வரிகளுக்கு இடையே உள்ளவற்றை நீங்கள் படிக்க வேண்டும். அனைத்து குற்றச்சாட்டுக்களுமே உண்மையாகிவிடாது" என்றார்.

பிராந்திய கட்சிகள்
இந்த சர்வே-யில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிராந்திய கட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பாஜக, காங்கிரஸ் மட்டுமல்ல நாடுமுழுவதும் கொலை, கொள்ளை, சட்ட விரோத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் பெரும்பாலான கட்சிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications