டெல்லி பாணியில்.. கர்நாடகாவில் ஒரே வீட்டிற்குள் 5 பிணம்! எலும்புக்கூடாக கிடந்த சோகம்.. என்ன நடந்தது?
சித்ரதுர்கா: சித்ரதுர்காவில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகளை போலீசார் அவர்களது வீட்டில் திகில் சினிமாவில் காட்டுவதை போல கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த நபர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற அரசு நிர்வாகப் பொறியாளர் ஜெகநாத் ரெட்டி (85), மற்றும் அவரது மனைவி பிரேமா (80), மகள் திரிவேணி (62), மற்றும் மகன்கள் கிருஷ்ணா (60) மற்றும் நரேந்திரர் (57) என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தடயவியல் பரிசோதனைக்கு பின்னரே உறுதியான அடையாளம் தெரியவரும் என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை.
2019ல் என்ன நடந்தது: அவர்கள் கடைசியாக 2019 இல் வெளியே மக்களால் காணப்பட்டு உள்ளனர். , அதன்பிறகு அவர்களின் குடியிருப்பு பூட்டப்பட்டுள்ளது என்று போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். ஒரு அறையில் 4 எலும்புக்கூடுகளும், மற்றொரு அறையில் 1 எலும்புக்கூடும் காணப்பட்டன, குடும்ப உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தனரா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, கன்னடத்தில் எழுதப்பட்ட தேதியிடப்படாத மற்றும் கையெழுத்திடப்படாத நோட்டு ஒன்று கிடைத்தது. அதில்.. நாங்கள் தீவிரமான முடிவு ஒன்றை எடுக்க போகிறோம் என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால் என்ன முடிவு என்று கூறப்படவில்லை.
அதிர்ச்சி சம்பவம்: இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அப்பகுதி மக்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்தேகத்தின் பெயரில் கொடுத்த புகாரில் இந்த சோதனையை போலீசார் மேற்கொண்டனர். இது பற்றி போலீசார் தெரிவிக்கையில், குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசினோம். அவர்கள் அனைவரும் அந்த குடும்பம் தனிமையில் வாழ்ந்ததாகவும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் கூறினர்.
குடும்பம் கடைசியாக ஜூன்-ஜூலை 2019 வெளியே வந்தது. அதன்பின் இவர்கள் போனிலும் பெரிதாக பேசவில்லை. எதுவுமே சொல்லவில்லை. வீடு எப்போதும் பூட்டியே இருந்தது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, யாரோ ஒருவர் காலை நடைப்பயிற்சியின் போது அதே வீட்டின் மரக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். எங்களுக்கு போன் செய்து சொன்னார்கள். ஆனால் நாங்கள் காவல்துறையினருக்குத் தெரிவிக்கவில்லை" என்று அந்த குடும்பத்தின் உறவினர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்த வீடு பலமுறை சூறையாடப்பட்டது போல்.. உள்ளே கொள்ளையடிக்கப்பட்டது போல தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
எங்கே என்னென்ன உடல்கள்: நான்கு எலும்புக்கூடுகள் (படுக்கைகளில் இரண்டு, தரையில் இரண்டு) ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றொரு எலும்புக்கூடு மற்றொரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாரங்களை சேகரிக்க தாவணகெரேயில் உள்ள தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சாட்சியங்கள் சிதைக்கப்படாமல் இருக்க குற்றம் நடந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இறப்பிற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை. அது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது இருக்கலாமா என்று தெரியவில்லை நாங்கள் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணத்தை எங்களால் கண்டறிய முடியும் என்று கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்கள் யார், எவ்வளவு காலம் ஆனது அவர்கள் பலியாகி, எப்படி பலியானார்கள், என்று விசாரிக்க உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications