மறுபடியும் முதல்ல இருந்தா!! கோவா சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா.. தனிமையில் 2000 பயணிகள்
கோவா: கடந்த 2020இல் ஜப்பான் டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் எப்படி பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதோ, அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் கோவா-இல் நடந்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய போது, அது இப்படியொரு நிலைக்கு எடுத்து கொண்டு வந்துவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
அப்போது சீனாவில் தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்லப் பரவ தொடங்கியது. இதைக் கண்டு உலக நாடுகள் மிரண்டு போனது.

டயமண்ட் பிரின்சஸ் கப்பல்
அப்போது ஜப்பானில் டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் முதலில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது. மேலும், சொகுசு கப்பலில் பயணித்தவர்களில் அதிகபட்சம் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ஒரு கட்டத்தில் பல நாடுகளைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக இந்த கப்பல் இருந்தது.

சொகுசு கப்பல்
இந்நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு ஷாக் சம்பவம் தான் கோவா-இல் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவா நோக்கி சொகுசு கப்பல் கிளம்பியது. அந்த கப்பலில் வேலை செய்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சொகுசு கப்பலில் பயணித்த 2016 பேருக்கும் ஆர்டி பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

66 பேருக்கு கொரோனா
கொரோனா முடிவுகள் வரும் வரை கப்பலில் இருந்து யாரும் வெளியேற அனுமதி அளிக்க முடியாது எனக் கோவா சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே அறிவித்தார். அவர்களில் முதல் பேட்ஜ் மாதிரிகளின் கொரோனா முடிவுகள் நேற்று வெளியானது. அதில் அந்த சொகுசு கப்பலில் பயணித்த 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரம் பல நூறு பயணிகளின் டெஸ்ட் முடிவுகள் இனிமேல் தான் வரும் என்பதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Recommended Video

ஓமிக்ரானா?
அதேநேரம் இந்த சொகுசு கப்பலில் பயணித்த அனைத்து பயணிகளும் 2 டோஸ் கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோனா உறுதியானாலும் கூட பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications