7 உயிர்களை காவு வாங்கிய எண்ணெய் டேங்க்! சுத்தம் செய்ய முயன்றபோது நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஆந்திரா
உயிரிழந்த அனைவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள எண்ணெய் ஆலையை சுத்திகரிக்க முயன்ற 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடா மாவட்டத்தின் பெத்தபுரம் மண்டலத்தில் உள்ள ஜி ராகம்பேட்டா கிராமத்தில் 'அம்பட்டி சுப்பண்ணா' நிறுவனத்தின் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள ஒரு எண்ணெய் டேங்கில் மட்டும் கடந்த 2 நாட்களாக எண்ணெய் சேமிக்காமல் காலியாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த டேங்கை சுத்தம் செய்ய இன்று ஆட்கள் வரவழைக்க முயன்றிருக்கின்றனர்.
ஆனால் ஆட்கள் வெளியிலிருந்து கிடைக்காததால் உள்ளே இருந்த ஆட்களை கொண்டே சுத்தம் செய்யும் பணியை நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி காலை 9 மணியளவில் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தை சேர்ந்த வெச்சாங்கி கிருஷ்ணா எனும் தொழிலாளி ஏணி வழியாக டேங்க் உள்ளே இறங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. எனவே வெச்சாங்கி நரசிம்மம் எனும் மற்றொரு தொழிலாளி உள்ளே இறங்கியுள்ளார் இவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

உயிரிழப்பு
இதனால் பதறிபோன நிர்வாகம் அடுத்தடுத்து ஆட்களை அனுப்பியது ஆனாால் டேங்க் உள்ளே இறங்கிய யாரும் வெளியே வரவேயில்லை. கடைசியாக உள்ளே இறங்க முயன்ற தொழிலாளி மூச்சு திணறி வெளியே வந்துள்ளார். அவரை மீட்ட சக தொழிலாளிகள் அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்துள்ளனர். தனக்கு முன்னர் டேங்கினுள் இறங்கிய 7 பேரும் மயக்கமடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் டேங்குக்குள் இருந்த ஏழுபேரையும் மீட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர்.

முறைகேடு
இறந்தவர்கள் வெச்சாங்கி கிருஷ்ணா, வெச்சாங்கி நரசிம்மம், வெச்சாங்கி சாகர், கொரத்தாடு பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ் மற்றும் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் படேருவைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள இருவர் புலிமேரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொழிற்சாலையானது, தொழிற்சாலைக்கு என வகுக்கப்பட்டுள்ள விதிகளின் படி கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரும் புதியதாக 10 நாட்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாரணம்
இந்த சம்பவம் குறித்து காக்கிநாடா மாவட்ட ஆட்சியர் கிருத்திகா சுக்லா கூறுகையில், "விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் அரசு இரங்கல் தெரிவித்திருக்கிறது. அதேபோல இவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தொழிற்சாலை துணை ஆய்வாளர், மாவட்ட தொழில் அலுவலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வார்கள். பெத்தாபுரம் ஆர்.டி.ஓ 5 பேர் கொண்ட குழுவை விசாரணைக்கு உருவாக்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.

விசாரணை
விபத்து குறித்து கூறுகையில், "விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் டேங்கின் அடியில் ஓட்டை போட்டு உள்ளே இருந்த உடல்களை மீட்டுள்ளனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் வந்தால்தான் இறப்புக்கான முழு காரணம் தெரியவரும். முதல்கட்ட விசாரணையில் மூச்சடைப்பு காரணமாகதான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது" என்று கூறியுள்ளார். எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications