அப்பாவை காப்பாற்றணும்! 35 கிமீ சைக்கிள் ஓட்டிய 14 சிறுமி.. மகள் நடத்திய பாசப் போராட்டம்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பலத்த காயம் அடைந்த தந்தையை ஏற்றிக் கொண்டு 35 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியிருக்கிறார் 14 வயது சிறுமி.. தந்தையை காப்பாற்ற மகள் நடத்திய இந்த பாசப்போராட்டம் கடந்த 23ம் தேதி நடந்துள்ளது.
ஒடிசாவின் பத்ரக் மாவட்டம் நாடிகன் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சுஜாதா சேத்தி. இவரது தந்தை உள்ளூர் தகராறில் கடந்த 22-ம் தேதி பலத்த காயமடைந்தார்.

படுகாயம் அடைந்த தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த சிறுமி சுஜாதா சேத்திக்கு மருத்துவமனைக்கு செல்ல எந்த வாகனமும் இல்லை. யாருமே உதவிக்கும் முன்வரவில்லை.. இதனால் தன்னுடைய தந்தையின் 3 சக்கர மிதிவண்டியை எடுத்துக்கொண்டார். அதில் தனது தந்தையை அமர வைத்தார். அதன் பின்னர் தனது கிராமத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் தாம்நகர் மருத்துவமனைக்கு சைக்கிள் ஓட்டி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, சிறுமியின் தந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளித்தாலும், உடனே பத்ரக் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுமி சுஜாதாவிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து கடந்த 23-ம் தேதி தன்னுடைய தந்தையை அதே மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு, சுமார் 35 கி.மீ தூரம் சைக்கி மிதித்து, பத்ரக் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சிறுமி சுஜாதா சேத்தி. அங்கு சிறுமியின் தந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இப்போது ஓகே.. இவரை ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை செய்ய அழைத்து வாருங்கள்' என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
அதையடுத்து, சிறுமி தன்னுடைய தந்தையை மிதிவண்டியை மிதித்து சுமார் 35 கி.மீ தூரம் பயணித்து, வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே சிறுமி மிதிவண்டியில் ஒருவரை அழைத்துச் செல்வதைப் பார்த்த சிலர் பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொல்லி உள்ளார்கள். அதன் பின்னர் அவர்கள் சிறுமியை பத்ரக் நகரிலுள்ள மொஹதாப் சாக் அருகே நிறுத்தி விசாரித்தார்கள். அதைத் தொடர்ந்து இந்த தகவல் பத்ரக் எம்.எல்.ஏ சஞ்சிப் மல்லிக், தாம்நகர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமிக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார்கள்.
தனது தந்தையை வைத்து 35 கிமீ சைக்கிள் ஓட்டியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி சுஜாதா சேத்தி, " என் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்க எனக்கு ஆசை தான்.. ஆனால் அதற்கு எங்களிடம் காசு இல்லை. ஆம்புலன்ஸை அழைக்க என்னிடம் செல்போனும் இல்லை. அதனால், என் தந்தையின் மிதிவண்டியிலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன்" என்றார்.
இதனிடையே பத்ரக் மாவட்டத் தலைமை மருத்துவர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு, நாங்கள் ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவது இல்லை. ஆனால் அவர் அறுவை சிகிச்சை முடியும் வரை, மருத்துவமனையில் தங்கியிருக்க ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications