"என் மகனை காணோம்" பிணக் குவியலில் தேடும் தந்தை! ஒடிசா ரயில் விபத்தில் இதயத்தை இறுக வைக்கும் காட்சி
புவனேஷ்வர்: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களில் தன்னுடைய மகனும் இருக்கிறாரா என்று தந்தை ஒருவர் தேடும் காட்சி வெளியாகி காண்போரை கலங்க செய்து உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே சென்றுகொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஸ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இந்த ரயில் விபத்து அரங்கேறி இருக்கிறது.

இதில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டதாகும். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பயணிகள் பயணித்து உள்ளார்கள். அதேபோல் மற்றொரு பயணிகள் ரயிலான யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டு இருந்தது.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 280 ஐ தாண்டி இருக்கிறது. விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து வருகிறது. பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ரயிலில் பயணித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகவும், உடல் பாகங்கள் தனித்தனியாக ரத்த வெள்ளத்தில் தண்டவாளங்களில் இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்களை ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு சென்று ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டு இருக்கும் காட்சிகள் காண்போர் நெஞ்சை கலங்க வைத்து வருகின்றன.
அந்த அளவுக்கு மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துகொண்டு கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டு உள்ளன. காயமடைந்தவர்கள் ரத்த வெள்ளத்துடன் தூக்கி செல்லப்படுகிறார்கள். இவையெல்லாம் இளகிய மனம் படைத்தவர்கள் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாத அளவுக்கு கோரமானவை.

இந்த நிலையில்தான் உள்ளத்தை உருக்கும் மற்றுமொரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரு இடத்தில் தரையில் வரிசையாக கிடத்தி துணியால் மூடி வைக்கப்பட்டு உள்ளன. ஒரு வயதான நபர் ஒவ்வொரு உடலின் துணியையும் விலக்கி பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
அவரிடம் அங்கிருந்த நபர் என்னவென்று விசாரித்தபோது தன்னுடைய மகன் உடல் இங்கு இருக்கிறதா என்று தேடுவதாக கண் கலங்கியபடி அழுதுகொண்டே சொல்கிறார். பேச கூட முடியாமல் துக்கம் அவரது தொண்டையை அடைத்துக்கொண்டு நிற்கிறது. அவர் சொல்வதை கேட்டு தோளில் தட்டி மற்றொரு நபர் ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோ காண்போரை கலங்க செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications