ரோட்டில் நின்ற மாடுகள்.. ரொம்ப தப்பு.. 'ஓனரை' தூக்கி உள்ளே உட்கார வைத்த நீதிமன்றம்! குஜராத்தில்தான்!
காந்திநகர்: குஜராத்தில் சாலைகளில் பசுக்களை அலைய விட்டதற்காக அதன் உரிமையாளருக்கு நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.
குஜராத் உள்ளிட்ட 18 மாநிலங்களில் பசுக்கள் புனிதமாக பார்க்கப்படுகிறது. மேலும், இதனை வெட்டுவதற்கு எதிராக கடுமையான சட்டங்களும் அமலில் இருக்கின்றன.
இதன் காரணமாக சாலைகளில் எங்கு பார்த்தாலும் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனை சரிசெய்ய நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

குஜராத்
இந்தியா நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க நாடு. வட இந்தியாவில் மாடுகளுக்கு மிகுந்த மதிப்பளிக்கப்படுகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பசு மாடுகளை வெட்டுவது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த 2017ம் ஆண்டு இந்த சட்டத்தில் பாஜக அரசு சில மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன்படி பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதன் விளைவு சாலைகளில் எங்கு பார்த்தாலும் மாடுகள் அணிவகுத்து நின்றுகொண்டிருக்கும்.

நிதியுதவி
எனவே இந்த மாடுகள் இவ்வாறு திரிவதை கட்டுப்படுத்த சில 'பசு பாதுகாப்பகம்' என காப்பகங்களும் உருவாகின. இந்த காப்பகங்களுக்கு அரசு நிதியுதவி செய்வதாக கூறியிருந்தது. ஆனால் அரசாங்கத்திடமிருந்து போதிய நிதி வராததால் கடந்த செப்டம்பரில் இந்த காப்பகங்களிலிருந்து மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. இவ்வாறு அவிழ்த்துவிடப்பட்ட மாடுகள் போக்குவரத்திற்கு கடும் இடையூறை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்தன. எனவே மாடுகளை வளர்ப்பவர்கள் சாலையில் அதனை அவிழ்த்துவிடக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியது. அதேபோல புதிய சட்டமும் இயற்றப்பட்டன.

மாடுகள்
இந்த சர்ச்சைக்கு நடுவில், மாடுகளை தெருவில் அலைய விட்டதற்காக பிரகாஷ் ஜெய்ராம் தேசாய் என்பவருக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனையை விதித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 5 மாடுகளை அகமதாபாத் மாநகராட்சியின் கால்நடைத் தொல்லை கட்டுப்பாட்டுத் துறையின் பிடித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசாய் அதிகாரிகளை கடுமையாக மிரட்டியுள்ளார். எனவே இது தொடர்பாக இவர் மீது IPC பிரிவுகள் 308, 289, 186 மற்றும் 506(2) ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 மாதம்
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தேசாயின் மாடுகளால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதால் இவர் மீது பதியப்பட்ட 308 IPC பிரிவை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனாலும், மாடுகளை ரோட்டில் திரிய விட்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்படுவதாகவும், இனியும் யாரேனும் இவ்வாறு செய்தால் இதே தண்டனை அவர்களுக்கு பொருந்தும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மாடுகளை ரோட்டில் அலையவிட்டதற்காக குஜராத் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications