நான் ஊழல்வாதியா.. உடனே மன்னிப்பு கேளுங்கள்.. கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் விட்ட கத்காரி

உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் கத்காரி அதில் எச்சரித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கூட்டத்தில் நேற்று கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் கத்காரி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களை எதிர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம், இவர்களைத் தோற்கடிப்போம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது அவருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ்கள் பாயத் தொடங்கியுள்ளன.
பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கெஜ்ரிவால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டரீதியான வழக்கை சந்திக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாவது... 3 நாட்களுக்குள் கெஜ்ரிவால் தனது பட்டியலை திரும்பப் பெற வேண்டும். நீங்கள் தெரிவித்துள்ள கருத்து எனது கட்சிக்காரருக்கு பெரும் அவமரியாதையையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே நீங்கள் வெளியிட்டுள்ள இந்தியாவின் மாபெரும் ஊழல்தலைவர்கள் என்ற பட்டியலிலிலிருந்து எனது கட்சிக்காரரின் பெயரை நீக்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால், சட்டப்படி உங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.
சோனியா காந்தி, நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தவிர மற்ற பெரிய தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சிப் பிரமுகர்களை இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்வாதிகள் என்று கூறி பட்டியல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications