அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு: சசிகலா முயற்சிகள் தோல்வியடைவது ஏன்?

Subscribe to Oneindia Tamil
sasikala
Getty Images
sasikala

அ.தி.மு.கவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக எழுந்த விவாதம் தற்காலிகமாக முற்றுப்பெற்றுவிட்டது. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அ.தி.மு.க தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மேலிடத்தில் உள்ள தலைவர்களுக்கு அந்த உணர்வு இல்லை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சசிகலாவின் நம்பிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.கவில் சசிகலாவை இணைப்பது தொடர்பான பேச்சு எழுந்தது. ஆனால், அதற்கு கட்சியின் முக்கியத் தலைவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. அடுத்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை சந்தித்தது. இதன்பிறகு, தொண்டர்களை சந்திப்பதற்கு சசிகலா சுற்றுப்பயணம் செல்வார்' எனக் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பேரிடர் காரணமாக அவரால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து தொண்டர்களிடம் பேசி வந்த சசிகலா, கடந்த டிசம்பர் மாதம் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை சசிகலா எழுதியிருந்தார். அதில், உங்கள் நம்பிக்கை வீண் போகாது. நீங்கள் அனைவரும் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள். ஒரு சிலருடைய தேவைக்காகவும் விருப்பு வெறுப்புக்காகவும் செயல்பட்டு வரும் நமது இயக்கத்தை சரிசெய்து மீண்டும் தொண்டர்களுக்கான இயக்கமாகவும் தலைவர்கள் வகுத்த சட்டதிட்டங்களை அவர்கள் முன்னெடுத்த அதே பாதையில் பிறழாமல் நமது இயக்கத்தைக் கொண்டு செல்வோம்' எனக் கூறியிருந்தார்.

தேனி தீர்மானமும் ஓ.ராஜா நீக்கமும்

இதன்பிறகு, அ.தி.மு.க பொதுச் செயலாளர்' எனக் குறிப்பிடப்பட்ட லெட்டர்பேடில் அவ்வப்போது அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க, அ.ம.மு.கவை இணைக்க வேண்டும்' என்ற தீர்மானம் தேனி மாவட்ட அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடந்த கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூரில் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பும் விவாதப் பொருளாக மாறியது. இதனையடுத்து ஓ.ராஜாவை கட்சியில் இருந்தே நீக்கி ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டனர்.

நிச்சயம் நிறைவேற்றுவேன்

தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு தனது தலைமையை ஏற்றுக் கொள்வதற்கான சூழல் அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ளதாகக் கருதிய சசிகலாவின் கனவும் ஈடேறவில்லை. இதையடுத்து, கடந்த 7 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் சசிகலா. அதில், தென்மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து மிகப்பெரிய வரவேற்பு அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்தனர். நம் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என அனைவரும் ஒருசேர முழக்கம் எழுப்புகிறீர்கள். என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண்போகாத வகையில் என் எஞ்சிய வாழ்நாளை அர்ப்பணித்து நிச்சயம் நிறைவேற்றுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடுகள், அரசியல் வட்டாரத்தில் விமர்சனப் பொருளாக மாறியுள்ளது. சசிகலாவை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோதும், ஆளவிடுங்க சாமி' என ஒற்றை வார்த்தையை மட்டுமே ஓ.பி.எஸ் கூறினார். அதேநேரம், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையேயான முரண்பாடு என்பது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி ஒற்றுமையாக இருப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் உறுதியாக இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கெல்லாம் அ.தி.மு.க, அ.ம.மு.க கூட்டு?

தேனியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சிலர் ஓ.பி.எஸ்ஸை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, நாமெல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டோம். இந்தக் கட்சியை நம்பி ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது எனத் தெரியவில்லை. இயக்கம் ஒன்றுபட்டாலே 2024, 2026 தேர்தல்களில் நமக்கு நல்ல வெற்றி கிடைக்கும். அவ்வாறு ஒன்றிணையாவிட்டால் இதே நிலைதான் நீடிக்கும்' என ஓ.பி.எஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

paneer selvam and edappadi
Getty Images
paneer selvam and edappadi

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தேவகோட்டையில் வெற்றி பெற்ற அ.ம.மு.கவினர் 5 பேர், அ.தி.மு.கவை ஆதரித்து நகராட்சி சேர்மனாக்கியுள்ளனர். சின்னமனூரில் அ.ம.மு.கவை சேர்ந்தவரை சேர்மனாக்குவதற்கு அ.தி.மு.கவினர் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும், தி.மு.க எதிர்ப்பு என்ற புள்ளியில் உறுதியாக உள்ளனர். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே ஒற்றுமையில்லாமல் செல்வது? பிளவு இருக்கும் வரையில் அ.தி.மு.கவுக்கு சிரமம்' என ஓ.பி.எஸ் தரப்பில் கூறியதாகவும் தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால் ஓ.பி.எஸ் அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா தொடர்பான விவாதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

அம்பியா.. அந்நியனா?

ஒவ்வொரு முறையும் சசிகலா வருகை தொடர்பாக பேசப்படுவதும் பின்னர் அது நீர்த்துப் போவதும் ஏன்?'' என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடம் இருப்பதுபோலத் தெரியவில்லை. சசிகலாவுக்கு 100 சதவீதம் இடமில்லை' என சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். அதுவும் அமித் ஷாவை சந்தித்த பிறகு கூறினார். அதுதான் அவருடைய நிலைப்பாடாக உள்ளது. அவரது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபடவில்லை என்பதாகவும் பார்க்கலாம். பா.ஜ.க எதாவது கூறியிருந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்திருக்கும்'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அதுபோன்ற எந்த நிலைப்பாட்டிலும் அவர் இல்லை. தனது சொந்த சமூகத்தின் நலனுக்காக செயல்படுவதாகவும் ஓ.பி.எஸ் காட்டிக் கொள்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு தேனியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தலைமையில் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டமும் ஓ.பி.எஸ்ஸின் பண்ணை வீட்டில் நடந்தது.

அந்தக் கூட்டத்தில், ஒற்றுமையில்லாததால்தான் தோல்வி ஏற்பட்டது' எனத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஓ.பி.எஸ் கைகளில் கொடுத்தனர். அப்போது, தான் சசிகலாவை சந்திக்கப் போவதாக ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் கூறியும் அவரை யாரும் தடுக்கவில்லை. இதே தீர்மானத்தை வைத்து நடந்த பஞ்சாயத்தில் ஓ.ராஜா நீக்கப்பட்டுவிட்டார். இந்த ஆட்டத்தில் அம்பியாகவோ அந்நியனாகவோ இருக்க ஓ.பி.எஸ் ஆசைப்படுகிறார். ஆனால், அவர் ரெமோவாக கூட இல்லை என்பதுதான் களநிலவரம்'' என்கிறார்.

சசிகலாவுக்கு வேறு வழியில்லை

தென் மாவட்ட அரசியலுக்கு சொந்த சமூக வாக்குகளைப் பிரதானமாகப் பார்க்கிறார். தமிழ்நாடு அரசியலுக்கு ஏற்ப அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்பட்டாலும் அது பொருந்தி வரவில்லை. அ.தி.மு.கவில் ஒற்றுமை இல்லாததுபோலவும் தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளை சரியாக நடத்துவதையும் மக்கள் கவனிக்கின்றனர். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அ.தி.மு.க தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மேலிடத்தில் உள்ள டாப் 10 தலைவர்களுக்கு அந்த உணர்வு இல்லை'' எனக் குறிப்பிடும் ஷ்யாம்,

கட்சியின் சின்னம் ஒரு குழுவிடம் இருக்கும்போது புரட்சி வெடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் தரப்பில் சமாதானக் கொடியை காட்டினாலும் எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி இறங்கி வர வேண்டும் அல்லது அவரை கீழே இறக்க வேண்டும். ஒருமித்த கருத்து வந்து அனைத்து மாவட்டங்களும் சேர்ந்து முடிவெடுக்கட்டும்' என தினகரன் கூறுகிறார். அவர்கள் அவ்வாறு வர மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் பேசுகிறார்'' என்கிறார்.

மேலும், சசிகலாவுக்கும் வேறு வழியில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் என அவர் கூறினாலும் அந்தப் பதவியில் அவர் இல்லை. அ.தி.மு.கவில் இருக்கும் வழிகாட்டும் குழுவும் என்ன செய்கிறது எனத் தெரியவில்லை. காங்கிரஸ் போல அ.தி.மு.க மாறி வருகிறது'' என்கிறார்.

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே மோதலா?

அ.தி.மு.கவில் சசிகலா வருகை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கப் போகிறவர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிப்பேன்' எனக் கூறுவார். அப்படித்தான் சசிகலாவின் பேச்சையும் பார்க்க வேண்டியுள்ளது. தன்னை நோக்கி சிலர் வரவேண்டும் என்பதற்காக அவர் பேசி வருகிறார். தனது தம்பியை கட்சியைவிட்டே ஓ.பி.எஸ் வெளியேற்றியதில் இருந்தே அவரது நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் செய்கின்ற செயல்களுக்கு என்னை துணைக்கு அழைக்க வேண்டாம்' என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்'' என்கிறார்.

எடப்பாடி பக்கம் செல்வாக்கு இருப்பதால்தான் ஓ.பி.எஸ் அமைதியாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?'' என்றோம். அப்படியெல்லாம் இல்லை. இருவருக்கும் சரிசமமான அதிகாரங்கள் கட்சியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரு பதவிக்கும் ஓர் ஓட்டு' எனக் கட்சியின் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. சசிகலா தொடர்பான பேச்சுக்கள்தான் வெளிவந்ததே தவிர, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே பிரச்னை என எந்த இடத்திலும் தகவல் வரவில்லை.

தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ்ஸின் பங்கு எதுவும் இல்லை. அந்தத் தீர்மானத்துக்கு அவர் எந்தப் பதிலையும் கூறாததால் சசிகலாவை ஓ.ராஜா சந்தித்தார். இதையடுத்து அவரையும் ஓ.பி.எஸ் நீக்கிவிட்டார். இதில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+