ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறர் ஜெ...ராம்ஜேத்மலானிக்கு 'குட்பை'.. வருகிறார் சால்வே!
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியை அதிமுக கழற்றி விடுகிறது. அவருக்குப் பதில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகவுள்ளார்.
தற்போது லண்டனில் உள்ள ஹரீஷ் சால்வே இன்று இரவு அல்லது நாளை காலை டெல்லி வந்து சேருகிறார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் அவரே ஆஜராகப் போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்ஜேத்மலானி இத்தனைக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பாகவே வாதம் புரிந்திருந்தார். ஆனால் அதிமுக வக்கீல்களின் சொதப்பலால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது சிக்கலாகி விட்டது. இந்த நிலையில் தற்போது ராம்ஜேத்மலானியை கழற்றி விட்டு விட்டு ஹரீஷ் சால்வேயை நாடியுள்ளது அதிமுக தரப்பு.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் அளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது. இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிறைவாசம் தொடர்கிறது. இன்று சிறையில் தனது 12வது நாளை ஜெயலலிதா கழித்து வருகிறார்.
இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு
தற்போது உச்சநீதிமன்றத்தை ஜாமீன் கோரி அணுக அதிமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகராவின் தீர்ப்பு நகலை நேற்று நள்ளிரவு வாக்கில் அவர்கள் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து முக்கிய ஆலோசனை நடந்துள்ளது. இதன் அடிப்படையில், உச்சநீதி்மன்றத்தில் ஜாமீன் கோரி இன்று மனு செய்யவுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் குமார் கூறியுள்ளார். இன்று மாலைக்குள் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவுடன் ஆலோசனை
ஜாமீன் மனு தாக்கல் தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை அவரது வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில் ஆகியோர் இன்று சந்தித்தனர். அவருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
ஹரீஷ் சால்வே
ஜெயலலிதாவுக்காக உச்சநீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே ஆஜராகவுள்ளார். லண்டனிலிருந்து அவர் நாளைக்குள் வந்து விடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications