உச்சநீதிமன்றத்தின் நெருக்கடி- 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18. செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக நடைபெற உள்ளது. டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
நாடு விடுதலைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்டதாக அம்மாநிலம் இருந்தது. மாநிலத்தின் முதல்வர் என்பவர் ஜம்மு காஷ்மீர் பிரதமராக இருந்தார். இந்த நடைமுறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 1972-ம் ஆண்டு முதல் இதர இந்திய மாநிலங்களைப் போல "முதலமைச்சர்" என அழைக்கப்பட்டார்.

8 சட்டசபை தேர்தல்கள்: 1972-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த வரையில் மொத்தம் 8 சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலில் 76 சட்டசபை தொகுதிகள் இருந்தன. அப்போது பெரும்பான்மைக்கான பலம் 39 இடங்களாக இருந்தன. பின்னர் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 87 ஆக உயர்த்தப்பட்டன. அப்போது பெரும்பான்மைக்கான இடங்கள் 44 ஆக இருந்தன.
ஜம்மு காஷ்மீர் அரசியல் களம்: ஜம்மு காஷ்மீரில் 1972-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியாக இருந்தது. ஆனால் 1977-ல் தேசிய மாநாட்டு கட்சி, ஜனதா கட்சி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் 'தனிப் பெரும்பான்மை' பலத்தை சிதைத்தன. 1977, 1983 தேர்தலில் காங்கிரஸ் vs தேசிய மாநாட்டு கட்சி என்பதாகவே போட்டி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இருந்தது.1987 சட்டசபை தேர்தல் முதல் பாஜகவும் களம் கண்டது. 2002 சட்டசபை தேர்தல் முதல் தேசிய மாநாட்டுக் கட்சியும் பிரதான அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
2014-ல் கடைசி தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீர் எதிர்கொண்ட கடைசி தேர்தல் இதுவாகும். 2014-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும் பாஜக 25 இடங்களையும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றின. அப்போது பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018-ல் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனால் அம்மாநிலத்தில் முதலில் ஆளுநர் ஆட்சி, பின்னர் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கூறுபோடப்பட்ட காஷ்மீர்: 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலமானது சட்டசபையுன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் சட்டசபை இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டன.
உச்சநீதிமன்றம்ம் நெருக்கடி: 2019-ம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை செயல்படாமல்தான் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும்; சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது அம்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
3 கட்டங்களாக தேர்தல்: இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications