இதுதான் பிரமாஸ்திரம்..அசாம், திரிபுரா பாணியில் மோடி - அமித்ஷா! ஜார்கண்ட்டில் அலறும் ‛கை’ கூட்டணி
ராஞ்சி: அசாம், திரிபுராவில் பாஜக கையில் எடுத்த பிரசார வியூகத்தை அப்படியே ஜார்கண்ட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த வியூகம் அசாம், திரிபுராவில் பாஜகவுக்கு கைக்கொடுத்த நிலையில் ஜார்கண்ட்டிலும் ‛தாமரை' மலர உதவி செய்யுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன வியூகம் அது? வாங்க பார்க்கலாம்.
ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இங்கு நவம்பர் 13, நவம்பர் 20 என்று 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 30 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது பாஜக முக்கிய விஷயத்தை கையில் எடுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அது என்னவென்றால் வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு ஜார்கண்ட் அரசு அடைக்கலம் கொடுக்கிறது என்பது தான். அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் +ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசின் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் வங்கதேசத்தில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக ஜார்கண்ட்டுக்குள் ஊடுருவி உள்ளனர்.
இவர்கள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வாக்கு வங்கியாக கருதி அவர்கள் அனுமதிக்கின்றனர் என்று பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போது தேர்தல் பிரசாரத்திலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜார்கண்ட் துணை பொறுப்பாளரான அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டவர்கள் இதை தான் தொடர்ந்து பேசி வருகின்றனர். காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அலட்சியத்தால் தற்போது பழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வங்கதேச இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பழங்குடியினரின் உரிமையை பறிக்கும் செயலாக மாற உள்ளது என கூறி வருகின்றனர்.
மேலும் பழங்குடியினர் பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காட்டிய ‛ஜமை தோலோ' அறிக்கையை முன்வைத்து அவர்கள் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்த அமித்ஷா,‛‛வங்கதேச ஊடுருவல்காரர்களை தடுக்காமல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும்காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் மீது சாப்ட் கார்னரை மாநில அரசு கடைப்பிடிக்கிறது. இது பழங்குடியினருக்கு சிக்கலை ஏற்படுத்தும்'' என்று குற்றம்சாட்டி இருந்தார். பிரதமர் மோடி பேசும்போது, ‛‛வாக்கு வங்கி அரசியலுக்காக வேறு நாட்டில் இருந்து ஊடுருவி வருவோரைபாதுகாக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஊடுருவல்காரர்களால் நம் மக்களின் நிலம், வாழ்வாதாரம் போய்விடும்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே வங்கதேச ஊடுருவல்காரர்கள் தொடர்பான விஷயத்தை முன்வைத்து பாஜக அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது. மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலிலும் வங்கதேச இஸ்லாமியர்களை மம்தா பானர்ஜி மாநிலத்துக்குள் அனுமதிப்பதாக பாஜக கூறியது. அங்கு ஆட்சியை பிடிக்காவிட்டாலும் கூட அந்த பிரசாரம் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க உதவியது. இதனால் தான் மீண்டும் வங்கதேச ஊடுருவல்காரர்களை முன்வைத்து பாஜக தலைவர்கள் ஜார்கண்ட்டில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பிரசாரம் கைக்கெடுக்கிறதா? என்பதை நாம் அறிய தேர்தல் முடிவு வெளியாகும் நவம்பர் 23ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications