டெல்லியை தொடர்ந்து.. குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!
காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்றுதான் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ன் மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இதில், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் மேற்கூரை இடிந்த விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பயணிகளுக்காக காத்திருந்த கால் டாக்சி கார்கள் அப்படியே அப்பளம் போல நொறுங்கின. காருக்குள் இருந்த ஓட்டுநர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்திருக்கிறது. விபத்து நடந்த இடத்தை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
இதற்கிடையில் விபத்துக்குள்ளான டெர்மினல் 1 பகுதியை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் விரிவாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்ததாக தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சியினர் பிரதமர் மீது விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்திருக்கிறது. விபத்து நடந்த பகுதி கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டது என்று பாஜக தரப்பினர் கூறுகின்றனர். இப்படியான பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கையில், தற்போது குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ராஜ்கோட் பகுதியில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. பயணிகளை கால் டாக்சிகள் இறக்கி, ஏற்றும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து குறித்து காங்கிரஸ் பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. நேற்று விபத்து நடந்த டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியை மோடிதான் திறந்து வைத்தார் என்றும், அதேபோல ராஜ்கோட் விமான நிலையத்தையும் மோடிதான் திறந்து வைத்திருக்கிறார் என x சோஷியல் மீடியா தளத்தில் காங்கிரஸ் பதிவிட்டு விமர்சித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி ராஜ்கோட் விமான நிலையத்தை மோடி திறந்து வைத்ததாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. டெல்லி விமான நிலையத்தை தொடர்ந்து, ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications