ம.பி.: சிமி இயக்கத்தினர் தப்பியதை பார்த்துவிட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து 36 பேர் தப்பியோட்டம்
போபால்: மத்திய பிரதேசத்தில் சிமி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் சிறையில் இருந்து தப்பித்த நிலையில் தற்போது 36 சிறுவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்ட சிறையில் இருந்து சிமி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த திங்கட்கிழமை தப்பியோடினர். அதில் ஒருவர் தான் சிக்கினார். இந்நிலையில் அதே மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் இருக்கும்
சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 36 சிறுவர்கள் நேற்று இரவு தப்பியோடிவிட்டனர்.
அவர்கள் ஒரு பாதுகாவலர் மற்றும் 3 கான்ஸ்டபிள்களை தாக்கிவிட்டு ஓடினர். இதையடுத்து போலீசார் அவர்களை வலை வீசித் தேடியதில் 9 பேர் மட்டும் சிக்கினர். மீதமுள்ளவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
சிறுவர்கள் தப்பித்த செய்தி எங்களுக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு கிடைத்தது. அவர்கள் கான்ஸ்டபிள்களை அடித்துவிட்டு தப்பித்துள்ளனர். அவர்கள் திட்டம் போட்டு தப்பித்துள்ளது போன்று தெரிகிறது. சிறார் பள்ளி தலைவர் ஹமீது கான் சென்ற பிறகு இரவு 9.30 மணிக்கு 2 சிறுவர்கள் பாத்ரூம் போக வேண்டும் என்று கூறி பாதுகாவலர்களை கதவை திறக்குமாறு கூறியுள்ளனர்.
அவர்கள் கதவைத் திறந்ததும் பாதுகாவலர்களை தாக்கிவிட்டு ஓடியுள்ளனர். இதை பார்த்து அவர்களை தடுத்த கான்ஸ்டபிள்களையும் தாக்கியுள்ளனர். பிறகு அந்த சிறுவர்கள் அந்த யூனிட்டில் உள்ள அனைத்து சிறைக் கதவுகளையும் திறந்து பிறரும் தப்பிக்க உதவினர். அவர்கள் 5க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து பல்வேறு திசைகளில் சென்றுள்ளனர் என்றனர்.
சிமி இயக்கத்தினர் தப்பிச் சென்ற செய்தியை ஊடகங்களில் பார்த்து தான் சிறார்கள் தப்பித்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. தப்பித்துச் சென்ற 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications