மதிக்க மாட்டீங்களா.. நான் யாரு தெரியுமா? மீண்டும் ஜேடியூ தலைவராகும் நிதிஷ் குமார்.. பரபர பின்னணி
பாட்னா: ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலன் சிங்கை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி மீண்டும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அந்த பதவியை எட்டிப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த முடிவின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ் குமார். ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை உருவாக்கிய இவர் அதன் தலைவராக நீண்டகாலம் இருந்தார். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக லாலன் சிங்கை நியமித்தார்.

இந்நிலையில் தான் லாலன் சிங்கை நீக்கி மீண்டும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வரும் 29ம் தேதி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் தான் லாலன் சிங் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும், அந்த பொறுப்பை மீண்டும் நிதிஷ் குமார் ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முடிவின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அதாவது தற்போது பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ள நிலையில் துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமாரின் கட்சியின் தலைவரான லாலன் சிங்கிற்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இடையேயான நட்பு என்பது அதிகரித்துள்ளது. இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ‛இந்தியா' கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைத்ததில் நிதிஷ் குமார் பெரும் பங்கு வகித்தார். ஆனால் காலப்போக்கில் நிதிஷ் குமாரின் மதிப்பு என்பது ‛இந்தியா' கூட்டணியில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமாரின் முக்கியத்துவம் பற்றி ‛இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் சரியாக எடுத்துரைக்காதது, அதோடு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பங்கீட்டை ஜனவரி மாதத்திற்குள் முடிக்க லாலன் சிங் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் லாலன் சிங் மீது நிதிஷ் குமார் கடும் கோபத்தில் உள்ளாராம்.
இந்த காரணங்களால் தான் நிதிஷ் குமார், லாலன் சிங்கை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். மேலும் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபட்டால் உள்கட்சியில் குழப்பம் ஏற்படும் என அவர் நினைக்கிறார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த குழப்பத்தை நிதிஷ் குமார் விரும்பவில்லை. இதனால் லாலன் சிங்கிற்கு பதில் நிதிஷ் குமாரே தலைவர் பொறுப்பை ஏற்று செயல்பட உள்ளதாகவும், இதன்மூலம் ‛இந்தியா' கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு கூடுல் மரியாதை கிடைக்கும் என அவர் நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications