ஒரு நாள் அரசு மருத்துவரா இருந்து பாருங்க... எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தினர் பிரதமருக்கு நெத்தியடி
ஒரு நாள் அரசு மருத்துவராக இருந்து பார்த்தால் தான் டாக்டர்களின் கஷ்டங்கள் புரியும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தினர் பிரதமருக்கு நெத்தியடி கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லி : அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதி இல்லாமல் சிகிச்சை அளிக்க அல்லாடுகிறோம், ஒரு நாள் எங்களைப் போல நீங்களும் பணியாற்றிப் பார்த்தால் தான் எங்கள் வேதனை புரியும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எய்ம்ஸ் ரெசிடண்ட் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஜித் சிங் பாட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் மோசமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவசர காலங்களில் நோயாளிகளின் மோசமான செயல்கள் நாள்தோறும் மருத்துவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பிரதமர் ஒரு நாள் அரசு மருத்துவராக இருந்து பார்க்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கஷ்டம் புரியும்
"ஒரு செயல்திறன் மிக்க பிரதமர் கிடைத்ததற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் உங்களை வெண்கம்பலம் விரித்து வரவேற்கிறோம். நீங்கள் ஒரு நாள் அரசு மருத்துவராக இருந்து டாக்டர்கள் எவ்வளவு மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை நேரடியாகப் பாருங்கள். அரசு மருத்துவமனையில் முறையான சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களின் வசைபாடல்களுக்கு ஆளாகிறோம்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பிக்கை கூடும்
உங்களுடைய ஒரு நாள் பார்வையிடல் ஹெல்த் கேர் முறையில் மாற்றத்தை கொண்டு வரும், இதன் மூலம் மருத்துவத் தொழில் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கக் கூடும். ராஜஸ்தானில் சில மருத்துவர்களை மாநில அரசு ரெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. இதனைக் கண்டித்து ராஜஸ்தான் மருத்துவ சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

86 மருத்துவர்கள் கைது
ராஜஸ்தான் மருத்துவர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு அளிப்பதாக கூறி விட்டு அரசு கோரிக்கையில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனை தட்டிக் கேட்டதற்கு 86 மருத்துவர்களை கைது செய்துள்ளது, அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்துத் தான் டிசம்பர் 16 முதல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்
நல்ல கடின உழைப்பாளி மருத்துவர்களை ராஜஸ்தான் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் மீதான அடக்குமுறையை தடுத்து நிறுத்த ராஜஸ்தான் அரசுக்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications