மும்பையில் "கூவத்தூர்" ஃபார்முலா.. அஜித் பவார் கோஷ்டி ஒரு பக்கம்! சரத் பவார் இன்னொரு பக்கம்! பரபர
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், கூவத்தூரில் நடந்தது போன்ற சம்பவங்கள் இப்போது அங்கே அரங்கேறி வருகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கே என்பிசி கட்சியில் சரத் பவார் தலைமைக்கு எதிராக அஜித் பவார் போர்க்கொடி தூக்கியுள்ளார். சரத் பவார் முடிவை எதிர்த்து அஜித் பவார் பாஜக- சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார்.
அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இரு தரப்பிற்கும் இடையேயும் ஒருவித குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

மகாராஷ்டிரா: இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இருவரும் என்சிபி கட்சிக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கிடையே இரு தரப்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்காக இப்போது தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டியுள்ளது.
கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி அஜித் பவாரின் முகாம் தேர்தல் ஆணையத்தை அணுகியது. இதில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ்: மகாராஷ்டிர துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் தன்னிடம் 40 எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறார். இதனால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரியுள்ளார்.
கூவத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்படியொரு பிரச்சினை வந்த போது எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கேயே அவர்கள் சில நாட்கள் வரை இருந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியும். இதேபோன்ற சம்பவம் இப்போது மகாராஷ்டிராவிலும் அரங்கேறுகிறது.
ஏற்கனவே அஜித் பவாருக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கி அந்த பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டாலும், அஜித் பவார் கோஷ்டி எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பை ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பதவி: அந்தக் கட்டிடத்தில் ஜூன் 30ஆம் தேதி, அதாவது அஜித் பவார் போர்க்கொடி தூக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அஜித் பவாரை கட்சித் தலைவராக அவர்கள் தேர்ந்தெடுத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஜித் பவார், தனக்கு முதல்வர் பதவிக்கு வர ஆசை உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சரத் பவார் எப்போது தான் ஓய்வு பெறுவார் என்றும் கேள்வி எழுப்பினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மற்ற கட்சிகளில் தலைவர்கள் ஒரு வயதுக்குப் பின் ஓய்வு பெறுகிறார்கள். பா.ஜ.,வில் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். நீங்கள் எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சொல்வது தவறா என்ன.. உங்கள் வயது 83? இப்போதாவது ஓய்வு பெறலாமா" என்று அவர் தெரிவித்தார்.
நம்பர் கேம்: நேற்றைய தினம் மும்பையில் சரத் பவார், அஜித் பவார் இரண்டு பிரிவுகளும் மும்பையில் கூட்டங்களை நடத்தின. பெரும்பாலான எம்எல்ஏக்கள் அஜித் பவாரின் கூட்டங்களிலேயே கலந்து கொண்டதால் அவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 53 என்சிபி எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அதில் 32 பேர் அஜித் பவார் கூட்டத்தில் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் சரத் பவார் கூட்டத்தில் 14 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கிடையே சரத் பவார் டெல்லியிலும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், இதில் என்சிபி செயல் தலைவரும் எம்பியுமான சுப்ரியா சுலேவும் கலந்து கொள்வார். கடந்த வாரம் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா அரசில் அஜித் பவாரும் இணைந்த நிலையில், அவருக்குத் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சிவசேனா: இதற்கிடையே இந்தக் கூட்டணிக்கு சிவசேனாவிலும் அதிருப்தி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு சிவசேனா எம்எல்ஏக்கள் உடன் அவசர கூட்டத்தை நேற்று நடத்தினார். பால்தாக்கரே எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருக்க மாட்டார் என்று ஷிண்டே தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இது ஷிண்டே தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications