அதிகாரப்பூர்வமாக ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படவில்லை . ஆந்திரா அமைச்சர் ஷாக் தகவல்
அமராவதி: அதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை என்றும் தலைநகருக்கு ஏற்ற இடமாக அமராவதி இல்லை என்றும் அம்மாநிலத்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் போஸ்டே சத்யநாராயணா தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக மாறியுள்ளது.
அதேநேரம் 2024ம் ஆண்டு வரை ஹைதராபாத் தான் ஆந்திராவின் அதிகாரப்பூர்வ தலைநகராக தொடரும் என்றும் அதற்குள் புதிய தலைநகரை ஆந்திரா தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என 2014ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும் ஹைதராபாத் நிர்வாகம் முழுவதும் தெலுங்கானா அரசுக்குத்தான் சொந்தமாக உள்ளது.

5ஆண்டுகள் பணி
இதனால் ஹைதராபாத்தை போன்று விஜயவாடா அருகே அமராவதி நகரை உருவாக்கி தலைநகராக்க ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014ம் ஆண்டு முடிவு செய்தார். இதற்காக 5ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்தது.

வேறு தலைநகர்
இந்நிலையில் அமராவதியை தலைநகராக தொடர ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுக்கு விருப்பம் இல்லை. வேறு இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை வெளிப்படையாக அந்த கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைநகருக்கு ஏற்ற இடமில்லை
அமரவாதியை தலைநகராக தேர்வு செய்த விவகாரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே அண்மைக்காலமாக கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது.அமராவதி தலைநகருக்கு ஏற்ற இடமல்ல என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் போஸ்டா சத்யநாராயணா அண்மையில் கூறியிருந்தார். அதற்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது

அமராவதியே தொடரணும்
இதனையடுத்து, ஆந்திர மாநிலத்திற்கு நான்கு தலைநகரை அமைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு தெலுங்குதேசத்தில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த பாஜக ராஜ்யசபா எம்பி ஒய்.எஸ்.சவுத்ரி, அமராவதியில் தான் தலைநகர் அமைய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

அரசிதழில் வெளியிடவில்லை
இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர் போஸ்டோ சத்யநாராயணா தெரிவித்துள்ளார். அரசிதழில் இன்னும் அமராவதி தலைநகராக வெளியிடப்படவில்லை என்றும் முகவரி இல்லாத, முனிஷிபல் நிர்வாகம் இல்லாத ஒரு இடமாக அமராவதி இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அமராவதி தலைநகராக தொடருமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications